தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த யூடியூபர் ஹர்ஷா என்ற மகாதேவ், ஹைதராபாத்தின் குகட்பல்லி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையின் நடுவே, கை நிறைய ரூ.100 தாள்களை வைத்திருக்கிறார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தப் பணத்தை வானத்தை நோக்கி விசுகிறார். அந்தப் பணம் காற்றில் பறந்து சாலை முழுவதும் சிதறியது. அதைப் பார்த்த பாதசாரிகளும், பைக்கில், ஆட்டோக்களில் வந்தவர்களும் வாகனத்தை நிறுத்தி பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், இந்த வீடியோவின் முடிவில், ``இது போன்ற ஸ்டன்ட்களை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது போன்று நான் பதிவிடும் வீடியோக்களில் நான் வீசும் பணத்தைத் துல்லியமாக யூகிக்கக்கூடியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, என்னுடைய டெலிகிராம் சேனலில் நீங்கள் சேருங்கள். நான் நிறைய பணம் சம்பாதித்துள்ளேன் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். நீங்களும் சம்பாதிக்கலாம். என்னை டெலிகிராம் சேனலில் பின்தொடருங்கள்" எனக் கூறுகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர். மக்களின் கவனத்தை ஈர்க்கவும், சமூக வலைதளத்தில் பிரபலமாகவும், அதிக லைக்ஸ், வீவ்ஸ்காக சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு, அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பிய ஹர்ஷா என்ற மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தை சாலையில் வீசுவது சட்டவிரோதமானதல்ல என்றாலும், அது ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்கள், அமைதியைக் குலைக்கும் சட்டத்தின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.