யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்களில் அதிக அளவில் பிராங்க் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த பிராங்க் வீடியோ எடுக்கும் போது சில நேரங்களில் எதிர்ப்பை சந்திப்பதுண்டு. இப்போது பெண்களே பிராங்க் வீடியோ வெளியிடுகின்றனர். மும்பையில் அது போன்று ஒரு வாலிபர் பிராங்க் வீடியோ எடுத்து, அடிபட்டுள்ளார். மும்பை, காஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள அசோக்நகர் பகுதியில், இர்பான் அகமத் என்பவர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் நடமாடிய பெண்களை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதற்கு அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்தும் அவர்களை விரட்டி விரட்டி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இது குறித்து அப்பெண்களில் சிலர் உள்ளூர் ராஜ் தாக்கரே கட்சி பிரமுகர் மனோஜ் சவான் என்பவருக்குத் தகவல் கொடுத்தனர். மனோஜ் சவான் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து பெண்களை வீடியோ எடுத்த வாலிபரிடம் விசாரித்தார்.
உடனே அந்த வாலிபர் தான் பிராங்க் வீடியோ எடுத்ததாகக் குறிப்பிட்டார். அதோடு இது போன்ற வீடியோவை அனைவரும் எடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மனோஜ் சவான், பிராங்க் வீடியோ எடுத்த வாலிபரை அடித்து உதைத்து அந்த இடத்திலேயே அமரும்படி செய்தார். அதோடு இர்பானை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மனோஜ் சவான் ஒப்படைத்தார். போலீஸார் இர்பாநின் மீது மானபங்க வழக்கு பதிவுசெய்தனர். இர்பான் சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் ஆகும். அவர் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இது போன்ற வீடியோ எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.