பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகை ஷர்வாரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த `வேதா' சாதி எதிர்ப்பு பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது.
'பட்லா ஹவுஸ்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை இயக்குநர் நிகில் அத்வானியுடன் இணைந்திருக்கிறார் ஜான் ஆபிரகாம். இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஷர்வானி.
ராணுவ அதிகாரியாக இருக்கும் அபிமன்யு (ஜான் ஆபிரகாம்) உயர் அதிகாரிகளின் பேச்சை மீறியதால் ராணுவ பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். அதன் பிறகு அவரின் சொந்த ஊரிலிருக்கும் ஒரு கல்லூரியில் குத்துச் சண்டை பயிற்சியாளராக பணியில் சேர்கிறார். அந்தக் கல்லூரியில் சாதிய அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் வேதாவை (ஷர்வானி) காண்கிறார். வேதாவுக்குக் குத்துச் சண்டைக் கற்றுக் கொள்ள வேண்டுமென தீரா ஆசையிருக்கிறது.
ஆனால் ஆதிக்க சாதியினர் வேதாவின் கனவிற்கு முட்டுக்கட்டை இடுகின்றனர். இதனால் வேதாவுக்கு ஆதரவாக இருக்கிறார் அபிமன்யு. இதனையடுத்து ஜித்தேந்தர் பிரதாப் சிங்கின் (அபிஷேக் பேனர்ஜி) சாதிய ஆணவத்தால் வேதாவின் குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. வேதாவுக்கு நீதி கிடைக்க அபிமன்யு உதவிக்கரம் நீட்டுகிறார். வேதாவுக்கு உரிய நீதி கிடைத்ததா என்பதை அதீத ஆக்ஷன் பேக்கேஜில் சொல்லியிருக்கிறது படம்.
தனக்குப் பழக்கப்பட்ட ஆக்ஷன் மோடில் ஜான் ஆபிரகாம். சீரியஸ் டோன், உதவும் பண்பு போன்ற அம்சங்களுடன் ஜான் ஆபிரகாம் கதாபாத்திர வடிவமைப்பெல்லாம் ஓகே! ஆனால் அவரிடம் உணர்வுபூர்வமான காட்சிகளில் செயற்கைத்தனமான முகபாவங்களே எஞ்சி நிற்கின்றன. கோபம், போராட்ட குணம் என நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் ஷர்வானி. அதேபோல ஆக்ஷன் காட்சிகளில் பல சவால்களை மேற்கொண்டு 'வாவ்' சொல்ல வைக்கிறார்.
சாதிய ஆணவத்தில் இரக்கமற்ற குணமுடையவராகச் சுற்றித் திரியும் அபிஷேக் பேனர்ஜி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பார்வையாளர்களுக்கு தன்மீது கோபத்தை ஏற்படுத்தும் நடிப்பைக் கொடுத்து வில்லனாக ஜெயித்திருக்கிறார். கேமியோவில் வந்திருக்கும் தமன்னாவின் பாத்திரம் இந்தப் படத்திற்குத் தேவையில்லாத ஆணிதான். ஜான் ஆபிரகாம் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தைக் கொடுக்கும் கதாபாத்திரமெனத் திட்டமிட்டு தமன்னாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரின் கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறது.
மிதமான வேகத்தில் தொடங்கும் முதற்பாதி திரைக்கதையில் ஜான் ஆபிரகாம் தொடர்பாகத் தேவையில்லாத காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இதற்குப் பதிலாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் ஷர்வானியின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். இதனாலேயே இது சாதியப் பிரச்னையைச் சம்பிரதாயத்துக்குத் தொட்டுச் செல்லும் மற்றுமொரு நாயக பிம்ப சினிமா ஆகிவிடுகிறது.
அதிரடியான வசனங்களால் சாதிய ஆணவத்தைத் தோலுரிக்கிறார் வசனக்கர்த்தா. ஆனால், ஓவர்டோஸான ஆக்ஷன் காட்சிகள் படத்தின் இந்த முக்கிய அம்சத்தை மூடி மறைக்கின்றன. இரண்டாம் பாதியில் தேவையில்லாத ஆடம்பரமான ஆக்ஷன் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தைக் குறைத்து பார்வையாளர்களுக்கு அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது.
நீண்ட நாள்களாகக் கிடப்பில் கிடக்கும் வண்டியில் தப்பியோடும் 'கில்லி' பாணியிலான காட்சிகளெல்லாம் லாஜிக் மீறிலின் உச்சக்கட்டம். இதையும் தாண்டி மக்கள் முன்னிலையில் ஆதிக்க சாதியினர் நீதிமன்றங்களில் நிகழ்த்தும் வன்முறை, அவர்களுக்குப் பயந்து நீதிபதி ஓடி ஒளியும் போன்ற காட்சிகளெல்லாம் செய்தித்தாள்களில் ஆங்காங்கே நாம் பார்த்த ஒன்றுதான் என்றாலும் நம்பகத்தன்மையுடன் படமாக்கப்படவில்லை. இதைத் தாண்டி தேவையில்லாத சூழலில் பாடல்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டில் இன்னும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுத்துப் பணியை மேம்படுத்தியிருக்கலாம்.
இரவு நேர லைட்டிங்கை அதீதமாக இல்லாமல் சரியான அளவில் அமைத்ததற்காகவும் அதிரடியான சில ஆக்ஷன் காட்சிகளை அரங்கேற்றியதற்காகவும் ஒளிப்பதிவாளர் மலே பிரகாஷைப் பாராட்டலாம். ஆனால் அந்த ஆக்ஷன் காட்சிகளே ஓவர் டோஸாக மாறி ஜவ்வாக நீளும் காட்சியைக் கண்டிப்புடன் கையாண்டு சோர்வை ஏற்படுத்தாமல் தடுத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் மாஹிர் சாவேரி.
பாடல்களெல்லாம் தாளத்தில் மின்னுகின்றன. ஆனால், தேவையில்லாத இடங்களில் சொருகப்பட்டதால் அவை படத்திற்கு எந்தவிதத்திலும் உதவாமல் தள்ளி நிற்கின்றன. மற்றொரு பக்கம் டாப் ஸ்கோரிங்காக மனதில் நிற்கிறது பின்னணி இசை.
ஆக்ஷன் உட்படப் படத்தின் சூழலுக்குத் தேவையில்லாத காட்சிகளைக் குறைத்து தேவையான காட்சிகளுடன் சாதிய அரசியலை இன்னும் அழுத்தமாகச் சாடியிருந்தால் இந்த `வேதா'வை மனதாரப் பாராட்டிக் கொண்டாடியிருக்கலாம்.