இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் `வாழை'. அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios'-யின் முதல் திரைப்படம் இது.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை 'Disney+ Hotstar' வாங்கியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் இன்று ஜூலை 18-ம் தேதி வெளியாகியிருக்கிறது. யுகபாரதியின் வரிகளில் தீயின் குரலில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது இப்பாடல். அதன்பிறகு வெளியான இப்படத்தின் பாடல்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்காணவிருக்கிறது.
இந்நிலையில் நேற்று 'வாழை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் ராம், அமீர், வெற்றிமாறன், நெல்சன், மிஷ்கின், மடோன் அஸ்வின், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியிருந்தனர்.
இயக்குநர் அமீர் பேசுகையில், "உலகத்தின் அரிய கண்டுபிடிப்பு சினிமா என்று நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட சினிமாவை பணத்திற்காக, புகழுக்காக, அதிகாரத்தைப் பிடிப்பதற்காக எனப் பல வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்திற்கான அரசியலைப் பேசும் இயக்குநர்கள் சிலர் இருக்கிறார்கள். வெற்றிமாறன், ரஞ்சித், மாரிசெல்வராஜ் எல்லாம் அந்த வரிசையில் இருக்கிறார்கள். நான் திரையில் அரசியல் பேசுவதில்லை, தரையில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
'வாழை' என்பது மாரி செல்வராஜ் பேச நினைக்கும் இந்த சமூகத்திற்கான அரசியல். எல்லாரும் டீச்சர காதலிச்சிருப்போம். நிறைய சேட்டைகள் நானும் செய்திருக்கிறேன். மற்றோரு தாய் ஆசிரியைகள். எல்லோருக்கும் இதுபோன்ற கதைகள் இருக்கும். அதை எங்களால் திரைப்படமாகச் செய்ய முடியவில்லை. மாரி தன் வாழ்க்கையைத் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். வெற்றி- தோல்வி மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு வசூல் செய்யப்போகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இந்தப் படம் மாரிக்கு ஒரு நல்ல அடையாளத்தையும், அங்கீரத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.
பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படம் பார்த்தேன். அவ்வளவு அற்புதமான மாய யதார்த்தப் படைப்பு. படத்தில் அனைவரும் அவ்வளவு உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். 'காசி' படத்தைப் பார்த்துவிட்டு விக்ரம் சாருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டினேன். அதற்குப் பிறகு, 'தங்கலான்' படத்தில் விக்ரமைப் பார்த்து வியந்து என்னுடைய வாட்ஸ் ஆஃப்பில், 'தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த கலைஞன்' என்று ஸ்டேட்டஸ் பதிவிட்டேன். இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்" என்று பேசியிருக்கிறார்.