'கூழாங்கல்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் 'கொட்டுக்காளி' என்ற அழுத்தமான படைப்பை மக்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ்.
திரையரங்குகளுக்கென தேவையான அம்சங்கள் இருந்தால்தான் பார்வையாளர்களின் வருகை அதிகமாகும் என்ற கண்ணோட்டம் இருந்து வந்தது. அப்படியான அம்சங்கள் எதுவுமில்லாமல் ஒரு பயணத்தை அப்படியே யதார்த்தமத் திரையில் கொடுத்திருக்கிறார் வினோத் ராஜ். முன்பெல்லாம் ஒரு படத்தின் க்ளைமேக்ஸில் கதாநாயகன் இறந்துவிடுவதாகக் காட்சிப்படுத்தினால், அதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற ஃபார்முலா இருந்தது. நாளடைவில் அந்த ஃபார்முலா முற்றிலுமாக மாறியது. அதுபோல 'கொட்டுக்காளி' மாதிரியான ஆர்ட் ஃபார்முலாவை திரையரங்குகளுக்குத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கொண்டு வந்திருப்பது ஆரோக்கியமான முன்னெடுப்பே!
ஆணாதிக்கக் குணமுடையவர்களை அடித்து திரையின் முன் கொண்டு வந்திருக்கிறாள் கொட்டுகாளி. ஆணாதிகக்ச் செயல்கள் ஆண்களால் மட்டும் நிகழ்த்தப்படுவதில்லை, பெண்கள் மூலமாகவும் ஆண்கள் நிகழ்த்துகிறார்கள் என்ற நிதர்சனத்தைத் தனது வியூ ஃபைண்டர் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் வினோத்ராஜ். கொட்டுக்காளியின் அரசியல் பார்வையை இங்கே ஆழமாகப் பார்க்கலாம். இது ஸ்பாயிலராகக்கூட இருக்கலாம். ஆதலால் படத்தைப் பார்த்தவர்கள் மட்டும் இதன் பிறகு இக்கட்டுரையைத் தொடரவும்!
படத்தின் தொடக்கக் காட்சியில் ஒரு சேவலின் கால் கட்டப்பட்டிருக்கும். கட்டப்பட்ட சேவலின் அருகே மீனா (அன்னா பென்) அமர்ந்திருப்பார். இதனை ஒரே ப்ரேமில் நேர்த்தியாக வினோத் ராஜ் படம் பிடித்துக் காட்டியிருப்பார். அந்த சேவல் கால் கட்டை அவிழ்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவிட முயற்சிக்கும். ஆனால் மீனா வீட்டின் ஆண்கள் அந்த சேவலை துரத்தி பிடித்து மீண்டும் அதன் கால்களை இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். அந்த சேவலை மீனாவுக்கு ஒப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். தன் காதலருடன் மீனா சென்றதால், அவரை அடித்து இழுத்து வந்து வலுக்கட்டாயமாக வீட்டில் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள், சாதியைக் கெளரவமாகக் கருதும் ஆண்கள்.
சாதிய மனநிலை பெண்கள் மீது எவ்வாறு வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வினோத் ராஜ். காதலனிடமிருந்து பிரித்து வீட்டில் அடைக்கப்பட்ட மீனா பிடிவாத மனநிலையிலேயே (அதுதான் கொட்டுக்காளி) இருக்கிறார். அவருக்குப் பேய் பிடித்திருப்பதாக எண்ணி ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறார்கள். கூட்டிச் செல்லும்போது பாண்டி(சூரி) உட்பட அனைத்து ஆண்களும் திறந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் வருவார்கள். அதைப் போலப் பெண்கள் எல்லோரும் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு ஆட்டோவில் பயணித்து வருவார்கள். இப்படி பெண்களின் சுதந்திரத்தை முடக்கும் பழமைவாத வழக்கத்தை ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டில் அற்புதமாகப் பதிவு செய்திருப்பார் வினோத்.
மூட நம்பிக்கைகள் பெண்களின் மீது திணிக்கப்படுவதையும் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பதால் கோவில் அருகில்கூட செல்லாமல் தள்ளி நின்று கொண்டிருப்பார். இப்படியான மூட நம்பிக்கைகள் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும், ஆண்களுக்கெல்லாம் பொருந்தாது என்கிற வழக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறது படம். பி.எஸ்.வினோத் ராஜ் சிறுகதை போல மெல்லிய உணர்வைத் தரக்கூடிய திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். இருப்பினும் இந்த திரைக்கதையில் அதிரடியான மாஸ் காட்சியும் ஒன்று இருக்கிறது.
ஆம், முரட்டுக் காளையொன்று பாண்டி மற்றும் அவரது குடும்பம் செல்லும் வாகனத்தைத் தடுக்கிறது. காளையை நகர்த்துவதற்கு மமதையில் ஆண்கள் முன் செல்கிறார்கள். ஆனால் அவர்களைத் துளியும் மதிக்காமல் முட்டுவதற்கு வருகிறது காளை. இப்படியான நேரத்தில் ஒரு சிறுமி வந்து அந்தக் காளையை அழகாகக் கூட்டச் செல்லும் காட்சி ஆண் என்ற மமதை மனநிலையைச் சுக்கு நூறாக்கிவிடுகிறது. வக்கிரமான நபராகப் பாண்டி தொடக்கம் முதலே அவரின் வன்முறை செயல்களால் பயம் கொள்ள வைக்கிறார்.
ஒரு காட்சியில், பிடிவாதமாக எதுவும் பேசாமல் இருக்கும் மீனா, ஒரு பாடலை முணுமுணுக்கும்போது பாண்டிக்குக் கோபம் வந்து மீனாவைப் பயங்கரமாக அடித்துவிட்டு கொடூர ஆணாக நம் மனதில் பாய் போட்டு அமர்ந்து, பீடி புகைக்கிறார். இப்படியான சமூகத்தில் சிக்கிக் கொண்ட மீனாவுக்குச் சுதந்திரத்துக்கான ஏக்கமும் இருக்கிறது. இதனையும் ஆற்றங்கரையோரம் வரும் ஒரு கற்பனைக் காட்சியால் அழகாகக் காட்டியிருப்பார் வினோத் ராஜ். பேய் பிடித்திருப்பது மீனாவுக்கா அல்லது மற்றவர்களுக்கா?, யாருக்குப் பேய் விரட்டச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தைப் பயணத்திலேயே பார்வையாளர்களுக்கு எழுகிற அளவுக்குக் காட்சியைக் கோத்திருக்கிறார் வினோத்.
இது மட்டுமின்றி ஆணாதிக்க மனப்பான்மை ஆண்களிடமிருந்து மட்டுமல்ல அதற்குச் சாதகமாகக் குரல் கொடுக்கும் பெண்களிடமிருந்தும் எழுகிறது என்பதைப் பாண்டியின் சகோதரிகளாக வரும் கதாபாத்திரங்கள் மூலம் யதார்த்தமாகப் பதிவு செய்திருந்தார். இதையும் தாண்டி சில நீளமான ஷாட்களை கடந்து செல்கையில் பாண்டி மற்றும் இதர ஆண்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதற்குப்பின் ஒரு முக்கியமான பாலின அரசியல் இருக்கிறது. ஆம், ஆண்கள் சிறுநீர் கழிக்க வேண்டுமென நினைத்ததும் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, அவர்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள்.
இப்படியான சுதந்திரம் ஆண்களுக்கு இருக்கிறது. ஆனால் அதே சமயம் மாதவிடாய் சமயத்தில் இருக்கும் ஒரு பெண் நாப்கின் அணிவதற்காக வாகனத்தை நிறுத்தச் சொல்வார். அப்போது வாகனத்தை நிறுத்துவதற்கு ஏன்? எதற்கு? என ஆணவக் குரல் ஆண்களிடமிருந்து எழும். இதுமட்டுமல்ல, 'இவளுங்க வேற' என்பது போன்ற ஆண்களிடமிருந்து வரும் வசனங்களிலும் ஆணாதிக்கத்தைத் திரை போட்டுக் காட்டியிருக்கிறார். மேலும், குடும்ப வன்முறைகள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை 'கூழாங்கல்' படத்திலும் சுட்டிக் காட்டியிருப்பார். அதே போல இப்படத்திலும் பாண்டி நிகழ்த்தும் வன்முறையைக் கண்டு கண்ணீர் சிந்தும் சிறுவன் மூலம் ஒரே ஷாட்டில் அதைப் பதிவு செய்திருக்கிறார்.
இப்படியான ஆழமான அரசியல் பேசிய கொட்டுக்காளி திரைப்படம் 'இப்பயணத்தின் முடிவை உங்கள் வசம் ஒப்படைக்கிறோம்!' என்ற வசனத்தோடு முடிந்திருக்கும். உங்கள் பார்வையில் முடிவு என்னவென்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!