BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 18 August 2024

Ilaiyaraaja:``கம்யூனிசம்-பகுத்தறிவு; நாத்திகனாக இருந்த நான்,ஆத்திகனாக மாறிய தருணம்"-இளையராஜா

சென்னை சேத்துப்பட்டில் ரமணா ஆஸ்ரமத்தின் 100வது ஆண்டு விழா நேற்று (ஆகஸ்ட் 17ம் தேதி) நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, தனக்கு ஆரம்ப காலத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது குறித்தும் ஆன்மிக நம்பிக்கைகள் வந்த அந்தத் தருணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இளையராஜா

இது குறித்து பேசியிருக்கும் இளையராஜா, "ஆரம்ப காலங்களில் நான் என் அண்ணனுடன் சேர்ந்து நிறைய கம்யூனிச சித்தாந்தம் சார்ந்த கச்சேரிகளை நடந்தியிருக்கிறோம். அதில் நான் நிறைய கம்யூனிச பிரசார பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்திருக்கிறேன். அவர்கள் பகுத்தறிவை ஒட்டியும் பேசமாட்டார்கள், அதற்கு எதிர்ப்பாகவும் பேசமாட்டார்கள். அதுபோன்ற கம்யூனிசம் சார்ந்த அரசியல் கச்சேரிகளில் நிறைய இசை வாசித்ததால் எனக்கும் அந்த அரசியல் தாக்கம் இருந்தது. கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது.

பிறகு, இசையை முழுமையாகக் கற்றுக்கொள்ள சென்னை வந்து ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஆன்மிக நம்பிக்கை கொண்டவருடன் பணியாற்றியும் கடவுள் பற்றியெல்லாம் நான் அதிகம் யோசித்ததில்லை. ஒருநாள் மூகாம்பிகை கோவிலுக்குச் செல்லும்போது, கோயிலினுள் நுழைந்தவுடன் ஒரு மின்னல் என் இதயத்தில் பாய்ந்தது.

இளையராஜா

அந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவென்ற கேள்வி என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மூகாம்பிகையை தரிசித்துவிட்டு, கோவிலைச் சுற்றி வரும்போதே மூகாம்பிகை என் இதயத்தில் வந்து அமர்ந்துவிட்டாள். மூகாம்பிகையை தரினம் செய்தபிறகு, பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்தது. முதன்முதலில் நான் ஆர்கஸ்ட்ராவை வைத்து இசையமைத்தபோது, எனது இசைக் குறிப்புகளைப் பார்த்து இசை வாசித்த எல்லோரும் வியந்துபோனார்கள். 'அன்னக்கிளி' படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மூகாம்பிகை அருளால்தான் என் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்தது. அதிலிருந்து எனக்குள் கடவுள் நம்பிக்கை வந்து, மூகாம்பிகை பக்தனாக மாறினேன். அதன்பிறகு ஆன்மிக நம்பிக்கைகளும், அதுசார்ந்த தேடலும் எனக்குள் வந்தது" என்று கூறினார்.

மேலும், "இசை வாசிக்க வருபவர்கள் ஸ்டூடியோவில் சலசலவென பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அமைதியாக உட்கார வைப்பதே பெரிய சவாலான வேலையாக இருக்கும். ஆனால், நான் இசையமைப்பாளராக ஸ்டூடியோவில் உட்கார்ந்த உடனே, நான் எதுவும் சொல்லாமலே தானாவே எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து, இசை வாசிக்கத் தயாராகிவிடுவார்கள். இப்படி பல அற்புதங்கள் என் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது. இதெல்லாம் இறைவன் அருளால்தான் நிகழ்கிறது என்று நினைக்கிறேன்." என்று பேசியிருக்கிறார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies