BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 18 August 2024

“நான் கிறிஸ்தவரா இருந்தாலும் கோயிலுக்கும் போவேன்... ஆனா!” - நடிகை ஒய்.விஜயா பேட்டி

‘ஆடிவெள்ளி’…. ஓடிக்கொண்டிருக்கும்போதே பெண்களை தியேட்டர்களில் எழுந்து பக்தி பரவசத்தில் சாமியாட வைத்த படம். சித்ராவின் குரலில் ‘வண்ண விழியழகி’, வாணி ஜெயராம் குரலில் ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வராண்டா’ எஸ்.பி. சைலஜா குரலில் ‘ஆயி மகமாயி’ பாடல்கள் ஊர் கோயில் திருவிழாக்களில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள்.

ஒருபக்கம் பக்தி பரவசம், மறுபக்கம் எம்.எஸ். ராஜேஸ்வரியின் குழந்தை குரலில் ‘சொன்ன பேச்சை கேட்கணும் ஆனை மாமா’ பாடலில் யானையின் குறும்புத்தனம், ‘நேத்து ராத்திரி யம்மா’ சில்க் ஸ்மிதா பாடலை ரேடியோவில் போட்டு ஆட்டம் போடும் யானையின் சேட்டைகள் என பக்கா கமர்ஷியல் படமாக வசூலை வாரிக்குவித்த படம். தற்போது, ரீ மேக்கிற்காக ரெடியாகிக்கொண்டிருக்கிறது. இப்படி, செம்ம வரவேற்பை பெற்ற படத்தில் டெர்ரர் வில்லியாக வந்து டென்ஷனை எகிற வைத்தவர் நடிகை ஒய்.விஜயா. ”இப்போ, என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? என்ன படத்துல நடிச்சுக்கிட்டிருக்கீங்க? ஆடிவெள்ளி படம் வெளியான போது நடந்த சுவாரஸ்யங்கள்?” என பழைய நினைவுகளை அவரிடம் கேட்டேன்...

நடிகை ஒய் விஜயா

”நான், என் பொண்ணு பேரனோடு ஹைதராபாத்துல ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இத்தனை வருஷம் சென்னையிலதான் இருந்தேன். என் பொண்ணு அமெரிக்காவிலிருந்து ரீசன்ட்டா வந்தா, ஷூட்டிங்குல பிஸியா இருந்த காலக்கட்டங்கள்ல அவகூட அதிகநேரம் செலவிடல. அதனாலதான் இப்போ அவகூடவே இருக்கேன். இப்போவும், படங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்.

14 வயசுல நடிக்க வந்தேன். ஆரம்பத்துல ஹீரோயினாதான் நிறைய படங்களில் நடிச்சேன். பிறகு, காமெடி கேரக்டர், வில்லி, க்ளாமர்ன்னு எல்லா ரோல்களிலேயுமே நடிச்சேன். எந்தப் படமா இருந்தாலும் என் கேரக்டர் பேசப்படுமான்னுதான் பார்ப்பேன். அதனாலதான், இப்போவரைக்குமே ஒரு பிஸியான நடிகையா தொடர்ந்துக்கிட்டிருக்கேன். தமிழ் உட்பட பல மொழிகளில் கிட்டத்தட்ட 1,000 -க்குமேற்பட்ட படங்களில் நடிச்சுட்டேன்.

‘ஆடிவெள்ளி’ என் சினிமா வாழ்க்கையில மிக முக்கியமான படம். அப்போ, நான் தெலுங்குல ரொம்ப பிஸியா நடிச்சுக்கிட்டிருந்தேன். ராமநாராயணன் சார், ‘என்னம்மா தமிழ்லலாம் நடிக்க மாட்டீங்களா?’ன்னு கேட்டார். அதனாலதான், இந்த படத்துல உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன். ஆனா, சீதாவோட கால்ஷீட் கிடைக்கவே இல்ல. அவங்க பயங்கர பிஸி. ரொம்ப நாள் கழிச்சுதான் கால் ஷீட் கிடைச்சது.

கணவருடன் ஒய்.விஜயா

எல்லாம் ஒரே டேக்லேயே ஓகே பண்ணுவார் ராமநாராயணன் சார். அந்தளவுக்கு நாங்களும் நடிச்சுடுவோம். டெக்னாலஜி இல்லாத காலகட்டங்களிலேயே யானை, குரங்கு, பாம்பையெல்லாம் நடிக்க வெச்சவர். மனிதர்களை நடிக்க வைக்கிறதா அவருக்குப் பெரிய விஷயம்? மனுஷன் சும்மா ஷூட்டிங்குல டக் டக்குன்னு சீன்களை எடுத்துக்கிட்டே இருப்பார்.

அப்போல்லாம், எங்களுக்கு கேரவான்லாம் கிடையாது. ஆனாலும் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நடிச்சோம். சம்பளமே 2,500 ரூபாய், 5,000 ரூபாய், 10,000 ரூபாய்தான் இருக்கும். பெரிய நடிகர்கள், பெரிய கம்பெனின்னா மட்டும்தான் 30,000 ரூபாய், 40,000 ரூபாய்ன்னு இருக்கும். எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டோம். ஆனா, ’ஆடிவெள்ளி’ பெரிய ஹிட் ஆச்சு. எனக்கு, நல்ல பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துச்சு.

இப்போ, ஆடிவெள்ளி ரீமேக் பண்றாங்கங்குற விஷயம் எனக்குத் தெரியாது. யாரும் என் கூட இது சம்பந்தமா பேசவும் இல்ல. அதேநேரத்துல, படக்குழுவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள். ’ஆடிவெள்ளி’ படம் மாதிரியே இந்தப்படமும் பெரிய வெற்றியைக் கொடுக்கணும்” என்பவரிடம், ”உங்க பொண்ணு ஏன் நடிப்பு துறைக்கு வரல? நீங்க நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சதுக்கு எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?” என்று கேட்டபோது, “எனக்கு எந்த சினிமா பேக் கிரவுண்டும் கிடையாது. என்கூட பிறந்தவங்கன்னு என்னைச் சேர்த்து பத்து பிள்ளைங்க. ஒரு குழந்தையை வளர்க்கிறதுக்கே கஷ்டம், பத்து குழந்தைங்கள வளர்க்கிறதுக்கு எவ்ளோ கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க. அதுவும், ஆறு பெண் குழந்தைகள். நான், அஞ்சாவது பெண் குழந்தை.

மகள் மற்றும் பேரனுடன் ஒய்.விஜயா

எனக்கு நாலு அக்காங்க, ஒரு தங்கை, நாலு தம்பிங்க. நான் நடிக்க வந்தபிறகு, என்னோட வருமானத்துல எல்லோரையும் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அப்பவே, என் தம்பிங்களை லயோலா கல்லூரியில நல்லா படிக்க வெச்சேன். அப்பாவோடு சேர்ந்து அக்காங்க எல்லோருக்குமே திருமணம் பண்ணிவெச்சேன். இன்னைக்கு எல்லோருமே வெளிநாடுகளில் நல்ல நிலைமையில இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். ஃபிஷ் ஃப்ரை, பிரியாணி இப்படி எது சாப்பிட்டாலும் உடனே என் தம்பிங்க ஞாபகத்துக்கு வந்துடுவாங்க. அவங்களும் அப்படித்தான்.

மத்தபடி, என் பொண்ணுக்கு நடிப்புத்துறையில வர விருப்பமில்ல. என் கணவர் காலேஜ் பிரின்ஸிபல். அதனால, என் பொண்ணு நடிக்க வர்றதை விரும்பல. கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். அதனால, பொண்ணும் படிப்பு, வேலைன்னு இருந்துட்டா. என்ஜினீயரிங் முடிச்சு வேலைக்கு போயிக்கிட்டிருந்தா. அதுக்கப்புறம், கல்யாணம் பண்ணி வெச்சுட்டோம். இப்போ, அவளோட குடும்ப வாழ்க்கையும் ரொம்ப நல்லபடியா போய்க்கிட்டிருக்கு” என்றவரிடம், ”நிறைய பக்தி படங்களில் நடிச்சிருக்கீங்க? அதை, நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றபோது,

ஒய்.விஜயா

“நான் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆனா, எல்லா பக்திப் படங்களிலேயுமே நான் நடிச்சிருக்கேன். திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சின்னு எல்லா கோயிலுக்கும் போயிருக்கேன். ஆனா, எனக்கு மூடநம்பிக்கைகள், பேய் பிசாசுங்க மேலல்லாம் நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் எல்லா கடவுள்களும் ஒண்ணுதான். அன்புதான் நம்பளோட வாழ்க்கையில மிக முக்கியமானது. ” என்கிறார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies