வேலூர் வனக்கோட்டத்தில் பசுமைப் பரப்பை உயர்த்துவதற்காக `க்ரீன் தமிழ்நாடு மிஷன்’ திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் தொகையை `முறைகேடு’ செய்துவிட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரால், வனச்சரக அலுவலர்கள் உள்பட பலர் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். ``கடந்த நிதியாண்டில் (2023 - 2024) வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வன மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மரங்கள் நடும் பணிகள், காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைக்காக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து ரூ.20 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு செய்ததில், மாவட்ட உயரதிகாரி ஒருவர் உள்பட வனச்சரக அலுவலர்கள் பலரும் பங்குப் பெற்றுள்ளார்கள். கடந்த நிதியாண்டில் நடப்பட்ட மரங்கள் தீ விபத்துகளாலும், கோடை வெப்பத்தாலும் சேதமடைந்துவிட்டதாக வனச்சரக அலுவலர்கள் தவறான அறிக்கைச் சமர்பித்து, அரசாங்கத்தையே ஏமாற்றியிருக்கிறார்கள்’’ என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி, ‘க்ரீன் தமிழ்நாடு மிஷன்’ திட்ட இயக்குநரான முதன்மை தலைமை வனப்பாதுவலருக்கு மூன்று பக்க புகார்க் கடிதம் சென்றது.
இதையடுத்து, நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்குள்ளான வனச்சரக அலுவலர்கள் மீது உரிய விதிகளின்கீழ் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்க வேலூர் கோட்ட வனப்பாதுகாவலர் (பொறுப்பு) ராகுலுக்கு உத்தரவிடப்பட்டது. வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா தாக்கல் செய்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், சமீபத்தில் வேலூர் வனச்சரக அலுவலர் குமாரை `சஸ்பெண்ட்’ செய்தார் வனப்பாதுகாவலர் ராகுல். இதைத்தொடர்ந்து, பேரணாம்பட்டு, அமிர்தி, ஒடுகத்தூர் சமூகக் காடு, பள்ளிகொண்டா வன விரிவாக்கம், அரக்கோணம் சமூகக் காடு உள்ளிட்ட 12 வனச்சரகங்களிலும் நடவுத் தொகையாக கணக்குக் காட்டப்பட்டிருக்கும் விவரங்களையும் அலச ஆரம்பித்திருக்கிறார் வேலூர் கோட்ட வனப்பாதுகாவலர்.
நிதி முறைகேடு தொடர்பாக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வேலூர் கோட்ட வனப்பாதுகாவலர் (பொறுப்பு) ராகுலிடம் கேட்டபோது, ``முதற்கட்டமாக வேலூர் வனச்சரக அலுவலர் குமாரை சஸ்பெண்ட் செய்திருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றார் சுருக்கமாக.
இந்த நிலையில், வேலூர் வனக்கோட்டத்துக்குஉட்பட்ட ஒடுகத்தூர் வனச்சரகத்தில் புதிய பிரச்னை ஒன்று பூதாகரமாக வெடித்திருக்கிறது. ``குத்தகைதாரர் ஏலத்தொகையை செலுத்தாமல் போனதால், அந்தத் தொகையை வனக்காவலர்களிடம் இருந்து வசூலிக்க உயரதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக’’ கூறப்படுகிறது.
இதன் பின்னணி குறித்துப் பேசிய வனத்துறையினர் சிலர், ``ஒடுகத்தூர் வனச்சரகத்துக்குஉட்பட்ட காப்புக் காடுகளில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட புளிய மரங்கள், விளா மரங்கள், நெல்லி மரங்கள் உள்ளிட்ட மகசூல் கொடுக்கும் மரங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும், வனக்காவலர்கள் இந்த மரங்களின் சுற்றளவை அளந்து தோராயமான விளைச்சல் மதீப்பீட்டை வனச்சரக அலுவலரிடம் `லிஸ்ட்’ கொடுப்பார்கள். ஏலம் விடுவதற்குள் குரங்குகள், பறவைகள் சாப்பிட்டுவிடும். உள்ளூர் நபர்களும் பறித்துக்கொள்வார்கள். இதனால், மதிப்பிடப்பட்ட மகசூல் அளவு குறைந்துவிடும். நடைமுறையே இப்படித்தான் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்கீடு செய்யப்பட்ட புளிய மரங்களின் மகசூல், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்த குத்தகைதாரர் காய்களை தட்டி எடுத்துச்சென்றுவிட்ட பிறகு `போதிய லாபம் கிடைக்கவில்லை’ எனக்கூறி ஏலத்தொகையை செலுத்த மறுத்துவிட்டார். இதனால், உயரதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் வருவதாகச் சொல்லி, `அந்தத் தொகையை வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் தான் செலுத்த வேண்டும்’ என்று ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் கட்டாயப்படுத்துகிறார். ஏலத்தொகை ஏறக்குறைய ரூ.3 லட்சம் என்கின்றனர். `இரண்டு மாதச் சம்பளத்தை கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வேலைப் பார்க்க வேண்டுமா...?’ என்று ஒடுகத்தூர் வனக்காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். ஏலத்தொகை செலுத்தாமல் போன குத்தகைதாரர்மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வனக்காவலர்களுக்கு `மெமோ’ கொடுத்துவிடுவதாகவும், துறை ரீதியாக சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்...?’’ என்றனர்.
குற்றச்சாட்டுக் குறித்து, ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் இந்துவிடம் விளக்கம் கேட்டோம். நமக்குக் கிடைத்த தகவல்களை விரிவாக கேட்டுத் தெரிந்துக்கொண்ட வனச்சரக அலுவலர் இந்து, `இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை’ என்று ஒற்றை வரியில் விளக்கமளித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88