காவிரி மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் மணிவாசன், காவிரிதொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர். புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கர்நாடக அரசு பிரதிநிதிகள், "காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைவிட தமிழகத்துக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 90 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது" என்றனர்.
இதற்கு தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டத்தில் பேசியபோது, "இந்த ஆண்டில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் முறையாக வந்துகொண்டிருக்கிறது. 21.08.2024 அன்று பிலிகுண்டுலுவுக்கு 170.859 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 92.613 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் சூழலில் 12,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அதிக மழைப்பொழிவால் அணைகளுக்கு கிடைத்த உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீரை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு செப்டம்பரில் வழங்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்'' என்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பேசுகையில், "கடந்த 2 மாதமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் இல்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிப்பது குறித்து 2 மாநில அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வழங்கப்படும் பரிந்துரைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்'' என்றார்.