ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்தது.
ஆப்கனிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவைக்குள்ளும், வளாகத்திலும் இன்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நாடாளுமன்றத்தினுள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த சில மணி நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் போலீஸ் தெரிவித்தது.
முன்னதாக இன்று காலை கீழவை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு முதல் குண்டுவெடிப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் உறுப்பினர்கள் பதற்றமடைந்தனர்.
நாடாளுமன்றத்தில் செய்தி சேகரித்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் இதனை நேரலையில் ஒளிபரப்பியது. அவைக்குள்ளே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்தின் வெளியேவும் கார் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திலிருந்து அதிக அளவில் புகை கிளம்பியதை அடுத்து பொதுமக்களும் பீதி அடைந்தனர்.
தாலிபான்கள் பொறுப்பேற்பு
முன்னதாக, ஆப்கன் நாடாளுமன்றத்துக்குள் பல முஜாகிதீன்கள் நாடாளுமன்றத்தினுள் நுழைந்திருப்பதாகவும் கடுமையான சண்டை தொடர்வதாகவும் தாலிபான் தீவிரவாத இயக்க செய்தித் தொடர்பாளர் சபிஹில்லா முஜாஹித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
புதிதாக பதவியேற்றிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் அவையில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட போது, தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து எம்.பி.க்கள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எபதுல்லா கரிமி தெரிவித்தார்.