“அரசியல் கட்சியில் இருப்பவர்கள் தான் நடிகர் சங்கத்தில் வந்து அரசியல் செய்கின்றனர். நடிகர் சங்கத்தில் அரசியல் கூடாது என்று கூறுபவர்கள், அரசியலில் இருக்கக் கூடாது” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
அகில இந்திய விஷால் நற்பணி இயக்கம் சார்பில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 10 பெண்களுக்கு திருச்சியில் நேற்று திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில், தனது குடும்பத்தினருடன் பங்கேற்ற விஷால், மணமக்களுக்கு 51 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், அவர் மணமக்களை வாழ்த்திப் பேசியது: இன்று திருமணம் செய்துகொண்டவர் களும் என் உடன் பிறந்த சகோதரியைப் போன்றவர்கள் தான். இவர்களைக் கரம் பிடித்த வர்கள், கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார்களா என்று நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன்.
இந்த திருமணங்கள் விளம் பரத்துக்காக நடத்தப்பட்டவை அல்ல. என்னுடைய நற்பணி இயக்கம் மக்கள் சேவைக்காகவே தொடங்கப்பட்டது. எங்கள் பணியைப் பார்த்து மற்றவர்களும் பொது சேவையில் ஈடுபட வேண்டு மென்ற உயர்ந்த நோக்கில்தான் இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்துவருகிறோம்.
சினிமாதான் எனக்கு வாழ்வைக் கொடுத்தது. அதற்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன். மற்றவர்களையும் துரோகம் செய்ய விடமாட்டேன். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன். பின்வாங்கும் பேச்சுக்கே இட மில்லை.
நாடக நடிகர்களும் எங்களது அங்கத்தினர்கள்தான். அவர்களது வாழ்க்கை நிலையை நேரில் பார்த்துள்ளேன். எனவே, நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் மதுரையில் நாடக நடிகர்களுக்கான சங்கக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், கட்சி தொடங்கியவுடன் சங்கப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால், சரத்குமார் அப்படிச் செய்யவில்லை. இதை அவர் புரிந்துகொண்டால் நல்லது. அரசியல் கட்சியில் இருப்பவர்கள்தான் இங்கேவந்து அரசியல் செய்கின்றனர். நடிகர் சங்கத்தில் அரசியல் கூடாது என்று கூறுபவர்கள், அரசியலில் இருக்கக் கூடாது என்றார் விஷால்.