வேலூர் மாவட்டம் கல்யாண பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனை, ஓசூர் அருகே போலீஸார் நேற்று காலை கைது செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் கூறும்போது, கீர்த்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மாணவி கொலையில் ஒரு மாணவன் மட்டுமே குற்றவாளி’’ என்றார்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் வீரமணி, தொகுதி எம்பி செங்குட்டுவன், தொகுதி எம்எல்ஏ செ.கு. தமிழரசன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற வரவில்லை எனக் கூறி சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று குடியாத்தம்-காட்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவியின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதகமாக கே.வி.குப்பத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், எம்எல்ஏ செ.கு.தமிழரசன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண் ணன் ஆகியோர் கே.வி.குப்பம் காவல் நிலையம் வந்தனர். அங்கு, கீர்த்திகாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். கீர்த்திகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
வேலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூர் மாவட்டம் கல்யாண பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி, கடந்த 15-ம் தேதி பள்ளிக்கு சென்றபோது, அதே பகுதியில் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணையில், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கொலை செய்தது தெரியவந்தது. பலாத்கார முயற்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் புலன்விசாரணையை விரைந்து முடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.