6 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். 7 மணி நேரம் குண்டுச் சத்தம். பள்ளி முன் பெற்றோர் கதறல்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் நேற்று காலை 10.30 மணி அளவில் புகுந்த தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த 6 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்தாக்குதலின்போது துணை ராணுவப் படை சீருடையை தீவிரவாதிகள் அணிந்திருந்தனர்.
தீவிரவாதிகளில் ஒருவன் மாணவர்கள் நின்றிருந்த பகுதியில், தனது உடலில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினான்.
மற்ற தீவிரவாதிகள், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று மாணவர் களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பிணைக் கைதிகளாக தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்தனர். இதனால் பீதி அடைந்த பெற்றோர் பள்ளி முன்பு கதறி அழுதனர்.
141 பேர் பலி
தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததும், பள்ளியை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். சுமார் 7 மணி நேரம் குண்டுச் சத்தம் கேட்டபடி இருந்தது, 3 தீவிரவாதிகள் தங்கள் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். மீதமுள்ளவர்களை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள வர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழந் தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படு கிறது.
இந்த தாக்குதலுக்கு பொறுப் பேற்று தெஹ்ரிக் இ தலிபான் விடுத்துள்ள அறிக்கையில், “வடக்கு வஜிரிஸ்தானில் எங்களின் உறுப்பினர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் இப்பள்ளியில் தாக்குதல் நடத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளி வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மாணவன் ஷுஜா கூறும்போது, “தாக்குதல் தொடங் கியதும், அனைவரையும் தரையில் படுக்குமாறு எங்கள் வகுப்பாசிரியர் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் படுத்திருந்தோம். பின்னர், ராணுவ வீரர்கள் வந்து எங்களை மீட்டனர். பள்ளியின் பின்புற வாசல் வழியாக வெளியே வந்தோம்” என்றான்.
போலீஸ் அதிகாரி அப்துல்லா கான் கூறும்போது, “தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து தீவிரவாதிகளும் கொல் லப்பட்டனர். பள்ளி வளாகத் தில் தீவிரவாதிகள் வைத்தி ருந்த வெடிகுண்டுகளை அப்புறப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
3 நாள் துக்கம்
கைபர் பக்துன்கவா மாகாண முதல்வர் பெர்வைஸ் கட்டக் கூறும்போது, “தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாகாண அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்.
நவாஸ் ஷெரீப் கண்டனம்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறும்போது, “இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக் கிறேன். இது ஒரு தேசிய துயரமாகும். தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும். தீவிரவாதத்துக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான் அரசுக்கு எதிராக கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பாகிஸ்தானில் ஒரு பிரிவினர் தலிபான்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
பல ஆண்டுகள் அமைதியாக இருந்த அவர்கள் 2007-ம் ஆண்டில் இஸ்லாமாபாதில் உள்ள லால் மசூதி மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது தங்களை முதல்முறையாக ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ என்று அறிவித்தனர்.
தெஹ்ரிக் - இ - தலிபான் யார்?
ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவு அளித்து வந்த 13 குழுக்கள் இணைந்து இந்த புதிய அமைப்பை உருவாக்கின. பைதுல்லா மசூத் என்பவர் அதன் தலைவராக முடிசூட்டிக் கொண்டார்.
ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் இந்த அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் சுமார் 35 ஆயிரம் பேர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பின் புதிய தலைவராக ஹக்கிமுல்லா மசூத் பொறுப்பேற்றார்.