அணு ஆயுதங்கள் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாக்களித்தன. "அணு ஆயுதங்கள் இல்லாத உலகம்' என்ற இலக்கை அடையும் நோக்கில், ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் ஒன்று செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 169 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில், சீனா, பூடான் உள்ளிட்ட 5 நாடுகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. முன்னதாக, அந்த வரைவின் பிரிவுகள் குறித்து தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 9ஆவது பகுதி மீது தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தப் பகுதியில், "இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள், அணுஆயுதம் இல்லாத நாடு என்ற வகையில் என்.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்; தங்கள் நாட்டில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களையும், சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில், 165 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் எதிராக வாக்களித்தன. பூடான், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.