BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 3 December 2014

சட்டப்பேரவை இன்று கூடுகிறது : 3 நாள்கள் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. வியாழன் (டிச. 4), வெள்ளி (டிச. 5) திங்கள்கிழமை (டிச.8) ஆகிய மூன்று நாள்களில் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. வியாழக்கிழமை கூடவுள்ள பேரவையின் கூட்டத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அவை முன்னவர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அதிமுக சார்பில் அமைச்சர் வைத்திலிங்கம், அரசு கொறடா மனோகரன், திமுக சார்பில் சக்ரபாணி, கம்பம் ராமகிருஷ்ணன், தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டப்பேரவை செயலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், பெ.கந்தசாமி, நா.மகாலிங்கம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.ரங்கநாதன், ஏ.அ.சுப்பராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து, கூடுதல் செலவுக்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட அரசினர் அலுவல்கள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை விடப்படுகிறது. பின்னர், வரும் திங்கள்கிழமை (டிச.8) சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கையின் மீது விவாதமும், பதிலுரையும் நடைபெறுகிறது. மேலும், மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கீடு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பின்னர் பேரவை ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவன ஈர்ப்பா? ஒத்திவைப்பா? சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானமும், பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்புத் தீர்மானமும் கொடுக்கப்படுவது வழக்கம். கவன ஈர்ப்புத் தீர்மானம் என்றால், எதிர்க்கட்சிகள் அளிக்கக் கூடிய முக்கிய பிரச்னைகளை பேரவை அனுமதிக்கப் பெற்ற நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பேரவைக் கூட்டத் தொடர் மூன்று நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்க்கட்சியினரால் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்து அதன் மீது விவாதம் நடத்த இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து பேரவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டு வர விரும்பினால் அதுகுறித்து பேரவை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும். ஆனால், அதை பேரவையில் எழுப்புவதற்கு பேரவைத் தலைவர் தனது ஒப்புதலைத் தெரிவிக்க மறுக்கலாம். அதன்பிறகு, அதை பேரவையில் எழுப்ப முடியாது. இதனால், கவன ஈர்ப்போ அல்லது ஒத்திவைப்புத் தீர்மானங்களையோ அளித்து ஒரு பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை கூடவுள்ள பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க முடியுமா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்புகின்றனர். அதேசமயம், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு உரிய வகையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies