ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வை எழுதுபவர்களின் வயது வரம்பைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் - ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினர் வி. ஏழுமலை புதன்கிழமை துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் எத்தனை முறை பங்கேற்க வேண்டும் என்ற எண்ணிக்கையைக் குறைக்க அரசு ஏதும் திட்டமிட்டுள்ளதா?' என்று கேட்டிருந்தார்.
அப்போது, அவையில் இருந்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்: 'மத்தியப் பணியாளர்கள், பயிற்சித் துறை அல்லது இதர துறைகளில் சேர தேர்வெழுதுவோரின் வயது வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளதாக சில ஊடகங்களில் அண்மையில் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நாங்கள் அப்போதே மறுத்துவிட்டோம். குடிமைப் பணிகளுக்கான தேர்வில் மாற்றம் கொண்டு வரும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த நவம்பர் 23ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டறிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, யுபிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதுவோருக்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவில் 32 வயதாகும். அவர்கள் ஆறு முறை தேர்வில் பங்கேற்கலாம். இதர பிற்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) பிரிவில் தேர்வெழுதுவோருக்கான வயது 35 ஆகும். இப்பிரிவினர் 9 முறை தேர்வில் பங்கேற்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான வயது வரம்பு 37 ஆகும். இவர்கள் எத்தனை முறை வேண்டுமானலும் தேர்வெழுதெலாம்' என்றார் ஜிதேந்திர சிங்.