சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்குத் தடை விதிக்கும் உத்தேச முடிவை மத்திய அரசு நிறுத்திவைக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்குத் தடை விதிக்கும் வகையில், சிகரெட், புகையிலைப் பொருள்கள் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார். மேற்கண்ட தடையைக் கொண்டு வந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை வெங்கய்ய நாயுடு, தில்லியில் புதன்கிழமை நடத்தினார். அப்போது, பேசிய பலரும் சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, இவ்விஷயத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசிப்பதாகவும், அதுவரை சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கும் முடிவு நிறுத்திவைக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.