உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. க்யூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட சேகுவாரா, பொலிவியாவில் கடந்த 1967ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன.
2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்தபோது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன.
சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகின. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் தெரிவித்துள்ளார்.