"இலங்கையில் 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நார்வே அரசு நிதியுதவி அளித்து வந்தது. இதுதொடர்பாக, நார்வே அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
விடுதலைப் புலிகளுக்கு நார்வே அரசு நிதியுதவி அளித்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக, அந்நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும். போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட நார்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம், தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், "அவர்களை தோற்கடிக்க முடியாது' என்று கூறி எங்களது தைரியத்தைக் குறைத்தவர் எரிக் சோல்ஹெய்ம் என்றார் ராஜபட்ச.