பாமகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (நவ.20) நடைபெற உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அமைக்கப் போகும் கூட்டணி தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
பாமக தலைமை நிலையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாமகவின் தலைமை சிறப்பு செயற்குழு கூட்டம் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் வியாழக்கிழமை (நவ.20) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 11 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக அணியிலேயே பாமக இடம்பெற்றது. தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்றார்.
அதனால், திமுக - பாமக இடையே கூட்டணி ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், திமுக - அதிமுகவோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ராமதாஸ் மறுத்துவிட்டார். பாமக தலைமையில் கூட்டணி: இந்நிலையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களின் வாயிலாக, 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் புதிய அணி அமைப்பது தொடர்பான அறிவிப்பையே ராமதாஸ் வெளியிட உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.