சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களையும், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "5 பேரையும் விரைவில் தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை இந்தியத் தூதரகம் எடுத்து வருகிறது' என்றார். குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும், இந்தியத் தூதரகம் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவுக்கு திரும்புவதற்குத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகு, 5 பேரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்கள் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ராஜபட்சவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.