இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற விசாரணை நடைபெறாது என்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறினார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனா திடீரென ராஜிநாமா செய்தார். அதிபர் தேர்தலில், ராஜபட்சவுக்கு எதிராகப் போட்டியிட் போவதாக அறிவித்த அவர், எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள போர்ப் படிப்பினை - நல்லிணக்க ஆணையத்தின் முடிவுகள் ஏற்கப்படும். நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் அதிபராக இருந்த ராஜபட்சவை எந்த விதமான போர்க்குற்ற விசாரணைக்கும் உள்படுத்த மாட்டேன். அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, இலங்கையின் பாதுகாப்புத் துறை அதிகாரியையோ, சர்வதேச போர்க் குற்ற விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உள்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் என்றார். போர்க் குற்ற புகார்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ராஜபட்ச எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.