BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 28 November 2014

மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் : ஜி.கே. வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என தனது கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே. வாசன். இதன் மூலம், தமிழகத்தில் மீண்டும் த.மா.கா. உதயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக இம்மாத தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், புதிய இயக்கம் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். ஜி.கே. வாசன் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து, அவரது கட்சியின் பெயர் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. ஏற்கெனவே, ஜி.கே. மூப்பனாரால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டதால், மீண்டும் அதே பெயரை ஜி.கே. வாசன் தனது கட்சிக்குப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய பெயரை அவர் தனது கட்சிக்கு சூட்டுவாரா என பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, நவம்பர் 26-ஆம் தேதி சென்னையில், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயர் நவம்பர் 28-ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறி, எதிர்பார்ப்பை நீட்டிப்புச் செய்தார்.

இந்த நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஜி.கே.வாசனின் புதிய இயக்கத்தின் பொதுக் கூட்டம் தொடங்கிய சில நிமிஷங்களில், ஜி.கே. வாசன் தனது கட்சியின் பெயர், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என அறிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் தமாகா மீண்டும் உதயமாகியுள்ளது. கலைக்கப்படாததால் கிடைத்த அதே பெயர்: காங்கிரஸில் இணைந்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை முறைப்படி கலைக்காததால் மீண்டும் அதே பெயர் ஜி.கே. வாசனுக்கு கிடைத்துள்ளது. ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு த.மா.கா. தலைவரான வாசன், 2002-இல் காங்கிரஸூடன் கட்சியை இணைத்தார். த.மா.கா.வில் இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் கட்சியைக் கலைப்பதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

கட்சியைக் கலைக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், காங்கிரஸில் இணைந்து விட்டதால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று புதிய விண்ணப்பத்தை வாசன் அளிக்கவில்லை. புதுச்சேரியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர், தமாகா-வின் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார். தற்போது, ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டதன் பேரில், கட்சிப் பதிவு உரிமையை முழுமையாக அவர், ஜி.கே. வாசனுக்கு அளிப்பதாகக் கடிதம் அளித்துள்ளார்.

கட்சி முறைப்படி கலைக்கப்படாததால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் 2002-இல் அக்கட்சியின் தலைவராக இருந்த வாசனுக்கு தேர்தல் ஆணையம் இப்போது மீண்டும் அதே பெயரை வழங்கியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் இதை அறிவித்த வாசன், மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies