யாழ்’ என்பது மிகப் பழமையான இசைக்கருவி. உலகத்திலேயே பல நாடுகளில் ஆதிகாலத்தில் வழங்கி வந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும் பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால் மிகச் சிறந்த இசைக்கருவியாகப் போற்றப்பட்டது. மிகப் பழைய காலத்தில், உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ்.
வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.வில்லில் நாணைப் பூட்டி, அதில் அம்பைத் தொடுத்து, நாணைப் பலமாக இழுத்து, அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியால் ஒரு வித ஓசை உண்டானது. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம் போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக ‘வில்யாழ்’ என்னும் இசைக்கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க்கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறியது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது. சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசைப்பாடுவதிலும் புகழ்பெற்றிருந்தார்கள்.
உருவ அமைப்பிலும் யாழ் வில் போன்றது. வில் வடிவமான யாழை, வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கி வந்தது. பிறகு கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பின்னர் யாழ் மறைந்து வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது.