விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையைக் குலைக்கும் வகையில், பொதுமக்களை இலங்கை அரசு அச்சுறுத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸயீத் ராத் அல் ஹுûஸன் குற்றம் சாட்டியுள்ளதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸயீத் ராத் ஹுûஸனுக்கு ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசிங்கா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.நா. அமைப்பின் உறுப்பினராக உள்ள, இறையாண்மை பொருந்திய ஒரு நாட்டுக்கு எதிராக, மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். தேசத்தின் கெüரவத்துக்கே இலங்கை அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. முகாந்திரமற்ற ஒரு விசாரணைக்கு மக்கள் உள்படுவது குறித்து அரசு கவலைப்படவில்லை.
எந்தவொரு மனித உரிமை அமைப்பும் ஆதாரங்களை வெளியிடுவதை இலங்கை அரசு தடுக்கவில்லை. எந்தவொரு தனி நபரையும் அச்சுறுத்தவும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கைக்கு எதிரான மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தும், நடுநிலையான விசாரணைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், தவறான மற்றும் உண்மையை திசை திருப்பும் தகவல்களை வேண்டுமென்றே அந்த நாடு பரப்பி வருவதாகவும் ஸயீத் ராத் அல் ஹுஸன் குற்றம் சாட்டியிருந்தார்.