சீனா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வுள்ள ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அதையடுத்து, ஆஸ்திரேலியாவில், ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இவ்விரு மாநாடுகளிலும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளின்போதும், இரு அதிபர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுகள் அதிகாரபூர்வமற்றவையாக இருக்கும் என புதினின் வெளிநாட்டுத் துறை விவகார ஆலோசகர் யூரி உஷகோவ், மாஸ்கோவில் சனிக்கிழமை கூறினார். இது போன்ற சந்தர்ப்பங்களை புதின் தட்டிக் கழிப்பதில்லை எனவும் அவற்றை வரவேற்கும் குணமுள்ளவர் என்றும் உஷகோவ் மேலும் கூறினார். இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ், இரு அதிபர்களும் சந்தித்துப் பேசுவது குறித்து முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.
ஆனால் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே, இருவரும் அதிகாரபூர்வமற்ற பேச்சு நடத்தினால் அதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம், இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத் தாக்குதல் நினைவாக பிரான்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதின், ஒபாமா வந்திருந்தனர். அப்போது இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்று வந்த போரில் ரஷியாவின் பங்கு குறித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான பின்னணியில் புதின்-ஒபாமா சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. உக்ரைன் பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு காணப்படாததன் பின்னணியில், புதின் - ஒபாமா பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு: அமெரிக்க உதவிக்கு ரஷியா ஆர்வம்
உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் அமெரிக்கா ஈடுபட்டால் அதனை வரவேற்போம் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ùஸர்கேய் லாவ்ரோவ் மாஸ்கோவில் கூறியுள்ளார். மாஸ்கோவில் அரசுத் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்த பேட்டி சனிக்கிழமை ஒளிபரப்பாயிற்று. அதில் அவர் பேசிய விவரம்: உக்ரைனில் தற்போது நிலவி வரும் பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு காண முற்பட்டால், அது சரியான முடிவாக இருக்கும். உக்ரைனின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ரஷியா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன், அமெரிக்காவின் நிலைப்பாடு வேறுபடுகிறது. எனினும், கிழக்கு உக்ரைன் பிரச்னைக்குத் தீர்வு அளிக்கும் விஷயத்தில் அமெரிக்கா பங்களிக்குமானால் அது வரவேற்கப்பட வேண்டியதாகும்.
உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சியாளர் தலைமைக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தும் சூழல் ஏற்பட அமெரிக்கா முயற்சிக்குமானால் அது சரியான நடவடிக்கையாக இருக்கும். உக்ரைன் அரசில் இடம்பெற்றுள்ள சிலர் ஆவேசமான நிலைப்பாடு கொண்டவர்களாக உள்ளனர். ரஷிய ஆதரவாளர்களான கிளர்ச்சியாளர்களுடன் முழு அளவிலான போரை உக்ரைன் அரசில் இடம் பெற்றுள்ள சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அது போன்ற சிந்தனையுள்ள உக்ரைன் தலைவர்களின் எண்ணத்தை அமெரிக்கா மாற்ற முனைய வேண்டும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ùஸர்கேய் லாவ்ரோவ் மாஸ்கோவில் கூறியுள்ளார்.