முல்லைப் பெரியாறு அணை மூவர் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாரபட்சமாக நடப்பதாக, கேரள அரசின் புகாரைத் தொடர்ந்து, மூவர் குழுவினர் திங்கள்கிழமை அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், கண்காணிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதனை தலைவராகக் கொண்டு மூவர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. குழுவில் தமிழக அரசின் சார்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் சாய்குமார், கேரளத்தின் சார்பில் அம்மாநில நீர்பாசனத்துறை முதன்மைச் செயலர் வி.ஜே.குரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மூவர் கண்காணிப்புக் குழுவினர், இதுவரை 5 முறை அணையில் ஆய்வும், ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், கண்காணிப்புக்குழுத் தலைவர் எல்.ஏ.வி.நாதன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக, ஆணையத் தலைவர் அஸ்வின் பாந்தியா, மத்திய நீர் வளத் துறைச் செயலர் அனுஜ் குமார் பிஷ்னோய் ஆகியோருக்கு, கேரள அரசு புகார் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், மூவர் குழுவினர் திங்கள்கிழமை காலை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்வதாகவும், மாலையில் மூவர் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.