பாதுகாப்பு, கணினி, கடல் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் முடிவு செய்துள்ளன.ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில், அந்நாட்டுப் பிரதமர் டோனி அபோட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நீண்ட காலமாக கையெழுத்திடப்படாமல் நிலுவையில் இருக்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் இறுதி செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடவும் முடிவு செய்யப்பட்டது. 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து: பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகள் இடையேயும் சமூகப் பாதுகாப்பு, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் ஒப்படைத்தல், போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிராக நடவடிக்கை, சுற்றுலா, கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது மோடி கூறியதாவது:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கூட்டுறவானது, மதிப்புகள், நலன்கள், கடல்பகுதியில் முக்கியப் பகுதிகளில் அமைந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள இயற்கையான கூட்டுறவாகும். இரு நாடுகளும், ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட முடிவு செய்துள்ளன. இதன்மூலம், உலகில் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி திட்டத்தில் பங்கேற்பதற்கு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர். இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டறிக்கை: அதைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலும், நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடவும், பயங்கரவாதக் குழுக்களில் வெளிநாட்டினர் சேர்வதால் எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்பட பயங்கரவாதத்தை தோற்கடித்தல் ஆகியவற்றில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபோட்டுக்கு மோடி நினைவுப் பரிசு: பேச்சுவார்த்தையின்போது, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டுக்கு, கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட ராணி லட்சுமிபாய் (ஜான்சி ராணி) சார்பாக ஆஸ்திரேலிய வழக்குரைஞர் ஜான் லாங் 1854ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார். முன்னதாக, கான்பெராவில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்துக்கு டோனி அபோட்டுடன் சென்று மோடி மரியாதை செலுத்தினார். அப்போது, முதல் உலகப்போரின்போது ஆங்கிலேயப்படையுடன் இணைந்து தீரத்துடன் போரிட்டதற்காக 1919ஆம் ஆண்டு சீக்கியப் படைப்பிரிவுக்கு பிரிட்டன் அரசர் ஜார்ஜ் மன்னரால் வழங்கப்பட்ட மான்சிங் கோப்பையை டோனி அபோட்டுக்கு பரிசாக மோடி அளித்தார்.
மோடிக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வரவேற்பு: இதனிடையே, டோனி அபோட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு 19 முறை துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி எனது சகோதரர் போன்றவர்-அபோட்: கான்பெரா பயணத்தை முடித்துக் கொண்டு மெல்போர்ன் சென்ற மோடிக்கு, டோனி அபோட் விருந்தளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அபோட் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை தனது சகோதரர் போன்றவர் என்றார். அப்போது மோடி தெரிவிக்கையில், "எனது ஆஸ்திரேலிய பயணம் இன்றுடன் முடிகிறது. இரு நாடுகள் இடையே புதிய உறவு தொடங்கியுள்ளது' என்றார். இதனிடையே, மெல்போர்னில் அந்நாட்டு வர்த்தக பிரமுகர்களை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஆஸ்திரேலியாவுடன் உறுதியான பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா ஆர்வமாக இருக்கிறது' என்றார். ஃபிஜி சென்றார் மோடி: பிறகு, ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஃபிஜி நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். கடந்த 1981ஆம் ஆண்டில், ஃபிஜிக்கு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சென்றார். அதன்பிறகு, ஃபிஜி செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதால், அவரது பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.