இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துவங்கி 150 ஆண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் இந்நாளில் இந்த போட்டி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். மொத்தம் 173 பந்துகளை சந்தித்த அவர், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களையும் விளாசி 264 ரன்கள் குவித்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ரோகித் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார். இரண்டாவது முறையாக இன்று இரட்டை சதம் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் எந்த பந்துவீச்சாளராலும் ரோகித்தை அவுட்டாக்க முடியாமல் திணறினர். கடந்த மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.