சர்வதேச அளவில் "சார்க்' அமைப்பு வலிமையானதாக உருவெடுப்பதற்கு, உறுப்பு நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதற்காக பல்வேறு யோசனைகளையும் அவர் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை அங்கமாகக் கொண்ட "சார்க்' அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பையில், இதே தினத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்ந்து வருகிறோம். இந்தத் தாக்குதலில் பலியானோரை நினைத்து நீங்காத துயரத்தில் உள்ளோம். பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தல், தெற்காசியப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே சவாலாக உள்ளது. பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, சார்க் நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முழுவதும் நிறைவேற்றுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை ஒளிரச் செய்வதற்கு நாம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பமாகும். நமது நாடுகள் அனைத்தும் பரஸ்பரம் பிற நாடுகளின் பாதுகாப்புக்கும், மக்களின் உயிருக்கும், நட்புறவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியம் என்பது ஜனநாயகம் செழித்து விளங்கும் பிராந்தியமாகவும், ஈடு இணையில்லா இளைஞர் சக்தி கொண்டதாகவும், உறுதியான மாற்றம் மற்றும் வளர்ச்சியை எதிர்பார்க்கும் பிராந்தியமாகவும் திகழ்கிறது. எதிர்காலம் இந்தியாவுடையதே என்பது எனது கனவாகும். அதுபோல, இந்தப் பிராந்தியமும் உருவாக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். சார்க் தலைவர்களுக்கு பாராட்டு: ஒட்டுமொத்த உலகத்தின் வாழ்த்துகளோடு, பிரதமர் அலுவலகத்துக்கு நான் சென்றேன். ஆனால், என்னை இயங்கச் செய்தது என்னவோ, அண்டை நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள், எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுதான்.
எனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக, மத்திய கிழக்கில் இருந்து பசிபிக் வரையிலும், தெற்கு கடலோரப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், ஒருமைப்பாடு என்னும் அலை ஆர்ப்பரித்து வருவதை நான் கண்டேன். தெற்காசிய வளர்ச்சிக்கு, பல்வேறு தடைகள் இருக்கின்றன. சிறிதும், பெரிதுமாக ஒரே மாதிரியான பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதேசமயம், நம்மிடம் உள்ள ஏராளமான வளங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சார்க் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தபோதிலும், சார்க் குறித்து நாம் பேசும்போது, குறை காணுதல், அவநம்பிக்கை ஆகிய 2 விமர்சனங்கள் தெரிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, குறை காணுதல் என்ற போக்கை நன்னம்பிக்கையாக மாற்ற நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் மோடி. மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அகமதுஜாய், பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கய் ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசினர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன. பிற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவித்து, மறைமுகப் போரில் ஈடுபடுகின்றன. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், "தெற்காசிய நாடுகள் தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, வறுமை நிலை, பிற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
தனது 15 நிமிட உரையில், பயங்கரவாதம் குறித்து நவாஸ் ஷெரீஃப் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி அஞ்சலி: இதனிடையே, மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினருக்கு, சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கம் மூலமாக மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அருகிலிருந்தும் விலகியிருந்தனர் !
சார்க் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சார்க் மாநாட்டில் புதன்கிழமை கலந்து கொண்ட அவர்கள் இருவரும், பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டனர். மாநாட்டு மேடையில் கூட 2 இருக்கைகள் இடம் விட்டே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே மாலத்தீவு, நேபாள நாட்டின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டின்போது, மோடியும், நவாஸýம் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மாநாட்டில் பேசுவதற்காக மோடியை நவாஸ் கடந்து சென்றபோதும் கூட, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
ஆகையால், அந்த மாநாட்டையொட்டி மோடி, ஷெரீஃப் பேச்சுவார்த்தை நடைபெற சாத்தியமில்லை என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவிக்கையில், "மாநாட்டுக்கு இடையே, இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்தும் எந்தக் கோரிக்கையும் வரவில்லை' என்றார்.