மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக குற்றங்களில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லங்களுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் பொதுவான சிறைகளில் அடைக்கப்படாமல் கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுவர். இந்த கூர்நோக்கு இல்லங்கள் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இதில் மதுரை, கோவையில் மட்டும் அரசானது தனியார் அமைப்புடன் சேர்ந்து நடத்துகிறது. மதுரை கூர்நோக்கு இல்லத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு வரும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த ஆண்டில் கூர்நோக்கு இல்லத்துக்கு 260 சிறார்கள் வந்தனர். 2014- அக்டோபர் வரை 568 சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லத்துக்கு வருவோரில் 8 வயது முதல் 17 வயதுக்குள்ளான சிறுவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களிலும் 16 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் கொலை மற்றும் கொள்ளை, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இல்லத்திற்கு வரும் சிறார்களில் சுமார் 35 சதவிகிதம் கொலை, கொலை முயற்சி வழக்கிலும், சுமார் 35 சதவிகிதம் பேர் வழிப்பறி, திருட்டு வழக்கிலும், 30 சதவீதம் பேர் அடிதடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். சிறார் குற்றங்கள் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகவும், மதுரையில் ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரத்தில் அதிகம் என்றும் தெரிவித்தனர். பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் சிறார்கள் அதிகமாக குற்றமிழைப்பதும் தெரியவந்துள்ளது.
சிறார் குற்றங்களைத் தடுக்கவே பள்ளிக் கல்வித்துறையில் நடமாடும் உளவியல் வாகனப் பிரிவும், சாலைகளில் திரியும் சிறார்களை மீட்க காவல்துறையில் சிறார் மீட்புப் பிரிவும் உள்ளது. ஆகவே இவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தி சிறார் குற்றங்களை தடுக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிப்புறங்களில் குற்றங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது வகுப்பறைக்குள்ளேயே குற்றங்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கும் சமூகத்தின் போக்கு கவலையளிப்பதாக உள்ளது என காவல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்