BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 20 November 2014

தில்லியில் 5 தமிழக மீனவர்களுக்கு வரவேற்பு



இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இந்தியாவின் ,அழுத்தத்தை தொடர்ந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லெட் ஆகியோர் வியாழக்கிழமை மாலையில் தில்லி திரும்பினர். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தில்லி வந்த அவர்களை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் வரவேற்றனர்.அண்டை நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டு அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் ஐந்து பேரும் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவர்களை வெளியுறவுத் துறை உயரதிகாரி சுசித்ரா தலைமையிலான குழுவினர் தனியார் வாகனத்தில் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.விமான நிலையம் அருகே உள்ள விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்ட அவர்களிடம் சர்வதேச நடைமுறைகளின்படி பிரகடனத்தில் அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இந்தியாவில் மற்ற குடிமக்கள் போல சுதந்திரமாகச் செல்ல அனுமதித்த அதிகாரிகள், வியாழக்கிழமை இரவே ஐந்து பேரையும் தில்லியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தில்லியில் "தினமணி' நிருபரிடம் வெளியுறவு அதிகாரி சுசித்ரா கூறியதாவது: "தாயகம் திரும்பிய ஐந்து தமிழக மீனவர்களும் நலமுடன் உள்ளனர். அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.மீனவர்கள் பேட்டி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஐந்து தமிழக மீனவர்களும் அளித்த பேட்டி வருமாறு: "நாங்கள் அனைவரும் மறுபிறப்பு எடுத்து தாயகத்துக்கு திரும்பியுள்ளது போல உணருகிறோம். எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு காரணமாக எங்களை விடுதலை செய்ய கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகே எங்களை விடுதலை செய்ய அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தத் தருணத்தில் தாயகம் திரும்பியுள்ள எங்களின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை' என்றனர்.

கடைசிவரை நீடித்த குழப்பம் : கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் திருச்சி விமான நிலையம் வந்து அவரவர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வர் என்று வியாழக்கிழமை காலையில் தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழகத்தில் மீனவர்களை வரவேற்க திருச்சி, சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், மீனவர்கள் ஐந்து பேரும் தில்லிக்கு அழைத்து வரும் தகவல் பிற்பகலில் உறுதியானது. இதையடுத்து, தில்லி சர்வதேச விமான நிலையத்தின் புற வாயில் வழியாக ஐந்து பேரும் அழைத்து வரப்படுவர் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஐந்து மீனவர்களை வரவேற்க தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருந்தனர். தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஜக்கையனும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில், ஐந்து மீனவர்களும் தரையிறங்கிய பிறகு அவர்களை குடியேற்றச் சோதனைக்கு வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, முக்கியப் பிரமுகர்கள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வாயில் பகுதி வழியாக ஐந்து பேரையும் ரகசியமாக தனியார் வாகனத்தில் ஏற்றி அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies