காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை உள்ளது என்று அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.இது குறித்து புது தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குப் புறம்பான செயல்பாடுகளில் கர்நாடக அரசு ஈடுபடவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.அதேவேளையில், மழைப் பொழிவின் மூலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு கிடைக்கும் கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசுக்கு உரிமையுள்ளது. அந்தத் தண்ணீரை வீணாக்காமல் தேக்கி வைக்கவே மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய மைசூர் காவிரி டெல்டா பகுதிகள், பெங்களூரு நகரங்களின் குடிநீர்த் தேவைக்கு, அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றார் அவர்.