போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை மத்திய மாகாண உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்காக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவை பாஜக மேலிடம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட தற்போது இணக்கமான உறவு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி ராஜீய முறையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.
இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக, தமிழக மீனவர்கள் சார்பில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இது, தமிழக மீனவர்களுக்கு சாதகமான நடவடிக்கைதான். இதை பாஜக வரவேற்கிறது. எனினும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு சிறையில் உள்ளனர். எனவே, அந்த நாட்டு அரசுடன் ராஜ்ஜிய முறையிலும், சட்ட ரீதியாகவும் பேசி மீனவர்களை விடுதலை செய்யவோ, இந்தியாவுக்கு கொண்டு வரவோ மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பித் பித்ரா கேட்டுக் கொண்டார்.
இந்திய தூதரகம் நடவடிக்கை : இலங்கை சிறையில் உள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இது தொடர்பாக அங்குள்ள தூதர் ஒய்.கே. சின்ஹா, வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங்குக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் உள்பட எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை நாட்டு சட்டப்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட கைதிகள் மேல்முறையீடு செய்ய பதினான்கு நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, வரும் வாரத்தில் தமிழக மீனவர்கள் 5 பேர் சார்பிலும் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.