அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சிகள் குறித்த உடன்படிக்கையை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென பி-5+1 என்று அறியப்படும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகள் பி-5+1 நாடுகள் என்று அறியப்படுகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட நாளுக்குள் உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்று ஈரானின் மூத்த தலைவர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் பொரூஜெர்தி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்:
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை படிப்படியாக நீக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அணு ஆராய்ச்சித் திட்டம் குறித்த உடன்படிக்கையானது நவம்பர் 24-ஆம் தேதி கையெழுத்திடப்பட வேண்டுமானால், ஈரான் மீதான பொருளாதாரத் தடை உடனடியாக முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றார். உடன்படிக்கைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு வந்துள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உடன்படிக்கை ஏற்படுவது சந்தேகம்தான் என்று குறிப்பிட்டார். ஈரான் தனது நிலைப்பாட்டை சற்று விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார். ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டம் மூலம், அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி வரும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஆராய்ச்சித் திட்டத்தை முடக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை முடக்குவதோடு, அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவி வரும் இடங்கள் என்று சந்தேகிக்கும் ஆய்வு மையங்களை மூடி வருகின்றன. அந்நாட்டின் பல்வேறு ஆய்வு நிலையங்கள் தொடர்ந்து சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன. தனது அணு ஆராய்ச்சியை ஈரான் நிறுத்திக் கொள்ளுமானால், அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன.