5 லட்சம் மாணவர்கள் 5 ஆயிரம் மரக் கன்றுகள்!: ஒரு கல்லூரிப் பேராசிரியரின் லட்சியக் கனவு, ‘ஐந்து லட்சம் மாணவர்களை சந்திக்க வேண்டும்; ஐயாயிரம் மரக் கன்றுகளை நட்டு மரமாக்க வேண்டும். இவை இரண்டுதான் எனது வாழ்நாள் லட்சியம்’’ என்கிறார் பேராசிரியர் கேப்டன் ஆபிதீன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாஹிர் உசேன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியரான இவர், 13 ஆண்டுகள் என்.சி.சி. ஆபீஸராக இருந்ததால் பெயருடன் கேப்டன் பட்டம் சேர்ந்துகொண்டது. விடுமுறை நாட்களில் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் கிராமப் புற மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.
“மாணவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமலேயே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்களுக்காக, ‘என்ன, எங்கே, எப்படிப் படிக்கலாம்?’ என்ற தலைப்பில் 140 படிப்புகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து 2004-ல் ஒரு புத்தகம் எழுதி 500 மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன். அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கே நேரில் சென்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என்ன படிக்கலாம்.. என்ன படித்தால் எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது, என்று தமிழகம் முழுவதும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் செல்லும்போது மரக்கன்றுகளையும் எடுத்துச் சென்று நடச் செய்வேன். கடந்த 10 வருடங்களில் சுமார் 200 வகுப்புகளை நடத்தி 1.30 லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறேன். எனது சர்வீஸ் முடிவதற்குள் 5 லட்சம் மாணவர் களை சந்தித்துவிட வேண்டும். 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்கிறார் ஆபிதீன். (தொடர்புக்கு.. 9965892706)