மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகளும் பாஜக தலைவர்களும் சந்தித்து, நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து விவாதித்தனர். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களான கிருஷன் கோபால், சுரேஷ் சோனி, தத்தாத்ரேய ஹோஸ்போலே, பாஜகவைச் சேர்ந்த ராம்லால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பானது, கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.
இச்சந்திப்பின்போது, நாட்டில் கல்விக் கட்டணங்கள் அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்த ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகள், அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்யுமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானியை வலியுறுத்தின. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துமாறும், கல்வித்திட்டத்தில் நல்லொழுக்கப் பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் உள்ள சில முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள், அமைச்சர் ஸ்மிருதி இரானியைக் கேட்டுக் கொண்டனர்.