ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய பிறகு, அந்த நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் செய்த ரூ.742 கோடி அளவிலான முதலீடுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. எனினும், இந்த அழைப்பாணையின்படி நிதிப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்குகள், வருமான வரித் துறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மாறன் சகோதரர்கள் நேரிலோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ தாக்கல் செய்யலாம் என்று அமலாக்கத் துறை அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை தில்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால், எப்போது இவர்கள் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011-இல் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, 2011-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்த புதன்கிழமை சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பரிசீலித்தார். இதையடுத்து, "சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதுவதால் அவற்றைப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், நான்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். இதற்கிடையே, சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் செய்த முதலீடுகள் தொடர்பான நிதிப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கருதி, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துகளில் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த முதலீடுகள் தொடர்பாக விசாரணைக்கு வரும்படி மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.