வேலையிலே மனசு வையுங்க! காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான். ""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை.வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான். அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும்.மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர்.
""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார்
வைத்தியர். மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார்.இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார். சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.