மாமல்லபுரத்தில் நடைபெறும் அன்புமணி மகள் திருமண நிகழ்வையொட்டி, மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மகள் திருமணம், மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பாமகவினர் மாமல்லபுரத்துக்கு மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்கின்றனர்.
ஏற்கெனவே மாமல்லபுரம் மாநாட்டுக்கு வாகனங்களில் சென்றவர்களுக்கும், மரக்காணம் பகுதி உள்ளூர் மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதுபோன்று பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 19 காவல்துறை ஆய்வாளர்கள், 52 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200 போலீஸார் இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் எஸ்.பி. விக்கிரமன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.