தரமற்ற உணவு விற்பனை செய்வததாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு புதன்கிழை சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு உணவு விடுதி இயங்கி வந்தது.
இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் விடுதியை கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, தரமுள்ள உணவுகளை விற்பனை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு, மீண்டும் உணவு விடுதியை புதன்கிழமை ஆய்வு செய்தனர். அதில் தரமற்ற உணவு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உணவு விடுதியைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.