காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய விடமாட்டோம். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அதை எங்கள் நாட்டின் பலவீனமாக தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள், மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் தூதர்கள், பிரநிதிகள் குழுவினர் மூலம் பல்வேறு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஐ.நா. சபை கொண்டுவந்த தீர்மானங்கள் இன்னும் பொருத்தமானதாகவே உள்ளன. அந்தத் தீர்மானங்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மாற்றாக முடியாது. காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, சர்வதேச நிலையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்தில் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூனுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியிருந்தது. மேலும், இந்திய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாதிப்புக்குள்ளான கிராமங்களை ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.