புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக, மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இயங்கி வரும் ஹார்வர்டு குருத்தணு ஆய்வு மையத்தில், அவரது தலைமையில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை புரிந்துள்ளது. இந்தக் குழு உருவாக்கிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குருத்தணுவை, எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில், அருகிலுள்ள பிற உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், புற்றுநோய் அணுக்களை மட்டும் கொல்லும் நச்சுப் பொருளை அந்தக் குருத்தணுக்கள் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது.
இந்தப் பரிசோதனை குறித்து காலித் ஷா கூறியதாவது: மூளைப் புற்று அணுக்களை அழிக்கும் திறன் குருத்தணுவை சில ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கண்டறிந்தோம். எனினும், அந்தக் குருத்தணு வெளிப்படுத்தும் நச்சுப் பொருளால், புற்று நோய் அணுக்கள் மட்டுமின்றி, அந்த குருத்தணுவும் கொல்லப்பட்டது. தற்போது, தாம் வெளிப்படுத்தும் நச்சுப் பொருளிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அந்தக் குருத்தணுவில் மரபணு மாற்றம் செய்துள்ளோம் என்றார் அவர். இந்த ஆய்வின் மூலம், மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகளைத் தயாரிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளதால், இது புற்று நோய் மருத்துவத்தில் ஒரு திருப்புமுனை என்று கூறப்படுகிறது. காலித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.