ஃபேஸ்புக் என்னும் சமூக ஊடகத்தின் வழியாக எந்த அளவிற்கு சர்ச்சையை கிளப்பவும் பிரபலம் அடையவும் முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கிஷோர் கே ஸ்வாமி, அவரது எழுத்தில் காணும் அதிரடிக்கும் அவரது தேகத்திற்கும் தொடர்பே இருக்க இயலாது, ஒல்லியான தேகம், பேட்டி அளிக்கும் போது கூட பட பட பேச்சு, ஒரு ஸ்டேட்டஸ்சில் ஓராயிரம் வெடிகுண்டுகளை கொளுத்தி போடுவது என ஒரு வித்தியாசமான பதிவர்.
அதிமுகவின் ஆதரவாளனாகவும் அம்மாவின் விசுவாசி என்றும் சொல்லிக்கொள்ளுபவர் என்றாலும் பல நேரங்களில் அதிமுக அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் உள்விளையாட்டுகளை அதிரடியாக வெளியிடுவார். தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை கொள்ள மாட்டார்.
அச்சு, காட்சி ஊடக பிரபலத்தை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் வாத்தியார்த்தனம் காட்டிக்கொண்டிருந்த மனுஷ்யபுத்திரன் மற்றும் சில பிரபல பத்திரிக்கையாளர்களுக்கு பாடம் புகட்டியவர். பல நேரங்களில் பெரும்பாண்மைக்கு நேரெதிர் நிலைப்பாட்டை எடுப்பவர் இந்த சர்ச்சை நாயகன். இவரிடம் மடக்கி பேசி விவாதத்தில் வெற்றி பெருவது என்பது மிக கடினமானது, எந்த பிரச்சினையை பேசினாலும் அந்த பிரச்சினை குறித்து ஓரளவுக்கு நல்ல அறிமுகத்துடன் செய்வதால் இவரை மடக்குவதும் கடினம்.
கனிமொழி மற்றும் கருணாநிதி ஆகியோர் மீது பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ளார், திமுகவினருக்கு மட்டுமல்ல பல நேரங்களில் அதிமுகவினரையும் விளாசுவார்.
சில நாட்களுக்கு முன் டிராபிக் போலிசிடம் எகனை மொகனையாக பேசி நாலு சாத்து வாங்கினாலும் தொடர்ந்து காவல்நிலையம் வரை போய் அவர்களுடன் போராடி வழக்கு பதிவு செய் என்று கூறி கடைசியில் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டால் நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்க கூடாது என்று சொல்லி அனுப்பியுள்ளார் இந்த கிரேசி பாய்.
இவரை உளவுத்துறை கையாள் என்றும், மிரட்டல் பேர்வழி என்றும் அவரது எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் இவரோ என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல என் கடன் சர்ச்சையை கிளப்புவதே என்று செயல்படுவார்.
இவரது டைம்லைனை தொடர்ந்து படித்தால் சில நேரம் சுவாரசியமான கிசு கிசுக்கள் கிடைக்கும், சில நேரம் அரசியல் விவகாரங்கள் கிடைக்கும், சில நேரங்களில் பொதுப்புத்திக்கு எதிரான கருத்துகள் ஆதாரங்களுடன் விவரமாக கிடைக்கும், பல நேரங்களில் வம்பு வழக்குகள் கிடைக்கும். எதை எடுக்க வேண்டும், எதை விட வேண்டும் என்பது அவரவர்கள் விருப்பம்.
எல்லா நேரமும் ஃபேஸ்புக்கிலே இருக்கின்றீரே வாழ்க்கையை நடத்த சம்பாதிக்க என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அதெல்லாம் போதுமான அளவு இருக்கு என்று முடித்துக்கொள்வார்.
கிஷோர் கே ஸ்வாமியின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/kishore.kswamy