தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேட்டி
அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த
வக்கீல்கள் காந்தி, சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட்
கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி
உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேட்டி கட்டி நுழைபவர்களை தடுக்கும் கிளப்புகள் மீது
நடவடிக்கை எடுக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
"தமிழர் உடையான வேட்டி அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் இது போன்ற நடைமுறை
சென்னையில் உள்ள சில கிளப்புகளில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், உரிய சட்ட முன்
வடிவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்
என்பதையும், அதன் அடிப்படையில் தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில்
இனி வருங்காலங்களில் மன்றங்கள் ஈடுபடுமேயானால், அந்த மன்றங்களுக்கு
வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்" என அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி சட்ட முன் வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டம்,
ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரும் என
முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
இந்த சட்ட மசோதாவானது, சட்டத்தை மீறும் தனியார் கிளப்புகள் அங்கீகாரத்தை
ரத்து செய்ய வழிவகுக்கிறது.
சட்டப்பிரிவு 3-ஐ மீறுபவர்கள் ஒரு வருடம் வரை
சிறைத்தண்டனை பெறவும், ரூ.25,000 அபாரதம் கட்டவும் சட்ட மசோதாவில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.