BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 10 August 2014

3-வது நாளிலேயே இங்கிலாந்திடம் பணிந்தது: 4-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளிலேயே முடங்கி போன இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

4-வது டெஸ்ட்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் ஸ்டேடியத்தில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 152 ரன்னில் சுருண்டது. அடுத்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக இரண்டாம் நாளில் வெறும் 36 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஜோ ரூட் 48 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜோ ரூட்டும், பட்லரும் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். நமது பந்து வீச்சாளர்கள் எதிரணிக்கு ஓரளவு நெருக்கடி கொடுத்த போதிலும், அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில எல்.டபிள்யூ.க்கள் மறுக்கப்பட்டன. பட்லர் 34 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற விராட் கோலி தவற விட்டார். இதே போல் அவர் 44 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த எளிதான ரன்-அவுட் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டோனி வீணடித்தார்.

இங்கிலாந்து 367 ரன்

இதனால் இந்த ஜோடியை பிரிப்பதற்கு நீண்ட நேரமாகி விட்டது. அணியின் ஸ்கோர் 304 ரன்களாக உயர்ந்த போது, ஜோ ரூட் 77 ரன்களில் (161 பந்து, 7 பவுண்டரி) பங்கஜ்சிங்கின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். முந்தைய டெஸ்டில் அறிமுகமாகி ஒரு விக்கெட்டும் எடுக்காத பங்கஜ்சிங் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றுவதற்கு மொத்தம் 69.2 ஓவர்கள் செலவழித்து இருக்கிறார். என்றாலும் அடுத்த விக்கெட்டுக்கு பங்கஜ்சிங் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது பந்தில் பட்லர் 70 ரன்களில் (130 பந்து, 10 பவுண்டரி), புஜாராவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் ஸ்டூவர்ட் பிராட் (12 ரன், 6 பந்து) காயத்தால் பாதியில் வெளியேற கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சனை அவரது பகையாளி ஜடேஜா சாய்த்தார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இது இந்தியாவை விட 215 ரன்கள் அதிகமாகும். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், வருண் ஆரோன் தலா 3 விக்கெட்டுகளும், பங்கஜ்சிங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

கம்பீர் 18 ரன்

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே மேற்கொண்டு 215 ரன்கள் சேர்த்தாக வேண்டிய சிக்கலுக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் மகிழ்ச்சிகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய், கவுதம் கம்பீர் தலா 18 ரன்களில் ஆட்டம் இழந்தனர். புஜாரா (17 ரன்) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூக்கு இரையானார். எப்போதும் நிலைத்து நின்று ஆடக்கூடிய ரஹானேவும் (1 ரன்) இந்த முறை ஏமாற்றினார். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். விராட் கோலி (7 ரன்), ஆண்டர்சனின் பந்து வீச்சில் வழக்கம் போல் ஸ்லிப்பில் பிடிபட்டார்.

ரவீந்திர ஜடேஜா (4 ரன்), கேப்டன் டோனி (27 ரன்), புவனேஷ்வர்குமார் (10 ரன்), வருண் ஆரோன் (9 ரன்), பங்கஜ்சிங் (0) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்ட இந்திய அணி 43 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. அஸ்வின் மட்டும் 46 ரன்களுடன் (56 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றார்.

இங்கிலாந்து வெற்றி

இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் வருகிற 15-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies