பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள கிராண்ட் பாலசில் நடந்த செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டையும், தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய ட்ரம்ப், ``பிரதமர் மோடியுடனும், இந்தியாவுடனும் ஒரு சிறப்பு பிணைப்பை காண்கிறேன். இந்தியப் பிரதமர் மோடி மிகவும் கடுமையான பேச்சுவார்த்தையாளர். வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ளும்போது ஒத்த எண்ணம் கொண்ட முக்கிய பங்காளியாக இந்தியாவைக் காண்கிறேன்.
அமெரிக்காவின் சிறந்த ராணுவ பரிசுகளில் ஒன்றான F-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன். இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான ராணுவ விற்பனையை பல பில்லியன் டாலராக அதிகரிப்போம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம்." என்றார்.