வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஐ.பி.எல்லில் கம்பீர் ஆலோசகராகச் செயல்பட்ட கொல்கத்தா அணியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரைத் தொடங்கினார். அந்தத் தொடரில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்தார்.
இதில், 3-வது டி20 போட்டியில் ஷிவம் துபே காயம் காரணமாக முதல் பாதியிலேயே வெளியேறியதால் அவருக்குப் பதில் கன்கஷன் முறையில் களமிறக்கப்பட்டார் ஹர்ஷித் ராணா. அறிமுகமான முதல் டி20 போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த பும்ராவுக்குக் காயம் குணமடையாததால், முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் 15 பேர் பட்டியலில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் நாக்பூரில் தொடங்கியது. இதில், ஜெய்ஸ்வாலும், ஹர்ஷித் ராணாவும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்து ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்ஷித் ராணா. இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களைக் குவித்தது. ஹர்ஷித் ராணா ஒரு மெய்டன் ஓவர் உட்பட 7 ஓவர்கள் வீசி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜா 9 ஓவர்களுக்கு 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர், இன்னிங்ஸ் இடைவேளையின்போது விக்கெட் எடுத்தது பற்றிய பேசிய ஹர்ஷித் ராணா, ``ஒரு நிலையான லென்த்தில் பந்துவீசுவது மட்டுமே நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் என்னுடைய பந்துகளை அடித்தார்கள். ஆனாலும், என்னுடைய லென்த்தை மாற்றவில்லை. அதற்கானப் பலனும் கிடைத்தது. அவர்கள் அடிப்பதற்காக ஸ்பேஸ் தேடினார்கள். அதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு நகர்ந்து ஆடுவது மட்டுமே. அதனால், முடிந்தவரை நெருக்கமாகப் பந்துவீச வேண்டும் என்று நானும் ரோஹித்தும் பேசினோம். நான் அதையே செய்ய முயன்றேன்." என்று கூறினார்.
இன்னிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு 249 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கில் 87, ஷ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ரன்கள் அடித்தனர். கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs