BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 8 February 2025

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த மோசடி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அனந்து கிருஷ்ணன் யார், அவர் மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "2019-ம் ஆண்டு வீட்டுக்கு அருகே காளான் சாகுபடி செய்யும் பிசினஸை தொடங்கினார் அனந்து கிருஷ்ணன். அதில் நல்ல லாபம் கிடைத்ததை அடுத்து பிசினஸை விரிவுபடுத்தினார். 2020 ஓணம் பண்டிகைக்கு பாதி விலைக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். 3000 ரூபாய்க்கான பொருட்கள் பாதி விலைக்கு வழங்குவதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி மக்களை கவர்ந்தார். மொத்த விலைக்கு மளிகைப் பொருட்களை வாங்கி பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். அந்த திட்டம் சக்சஸ் ஆனதை தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான கருவிகள் தையல் மிஷின், குடிநீர் சுத்திகரிப்பான், லேப்டாப் போன்றவை பாதி விலைக்கு வழங்கும் திட்டத்தை விளம்பரப்படுத்தினார். மக்களை நம்பவைப்பதற்காக பலருக்கும் பாதி விலையில் பொருட்களை வழங்கினார்.

பாதிவிலைக்கு பொருட்கள் வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட அனந்து கிருஷ்ணன்

தையல் மிஷின் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக ஆர்டர் செய்து குறைந்த விலையில் வாங்கிவிட்டு அதை பாதி விலைக்கு வழங்குவதாக நாடகம் நடத்தியுள்ளார். பாதிவிலைக்கு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது அனந்து கிருஷ்ணனின் வாடிக்கை. மோசடி பணத்தில் ஒருபகுதியை அரசியல் பிரமுகர்களுக்கும் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு சொசைட்டியை தொடங்கினார். பெரும் நிறுவனங்கள் சமூக பணிக்காக வழங்கும் சி.எஸ்.ஆர் ஃபண்ட் மூலம் ஸ்கூட்டர் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பாதிவிலைக்கு வழங்குவதாக அறிவித்தார்.

பாதிவிலை பொருட்களை வாங்கிவிரும்பும் மக்கள் பணம் செலுத்தி காத்திருக்க வேண்டும். சி.எஸ்.ஆர் பணம் வந்ததும் அவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறிவந்தார். மக்கள் பணம் செலுத்த வசதியாக எர்ணாகுளம் பனம்பிள்ளி நகரில் தனது தலைமை அலுவலகத்தை திறந்தார். களமசேரி, மூவாற்றுபுழா பாயிப்பிறா உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அலுவலகங்களை திறந்தார். பாயிப்பிறா அலுவலகத்தில் மட்டும் 50 ஊழியர்களை நியமித்தார். ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தொடக்கத்திலேயே தலா 30,000 ரூபாய் சம்பளம் வழங்கினார். 2 பிளாட்டுகளை வாங்கி ஊழியர்களை இலவசமாக தங்கவைத்ததுடன், உணவும் இலவசமாக வழங்கினார். இதுபோன்ற பல இடங்களிலும் அலுவலகங்கள் திறந்து, அதிக சம்பளத்துக்கு ஊழியர்களை நியமித்தார். ஊழியர்கள் வசிக்க பிளாட்டுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்தார். பல ஆடம்பர கார்களையும் வாங்கியுள்ளார்.

மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட அனந்து கிருஷ்ணன்

ஆடம்பர கிளப்புகளில் உறுப்பினர் ஆகி தினமும் கிளப்புகளுக்குச் சென்றுவந்தார் அனந்து கிருஷ்ணன். பர்சனல் உதவியாளர்களாக இரண்டு பெண்களை எப்போதும் உடன் வைத்திருப்பார். கைதுசெய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு இன்னோவா கிறிஸ்டா கார் ஒன்றை வாங்கியுள்ளார். பாதி விலைக்கு ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்த அனந்து கிருஷ்ணனின் 19 வங்கிக் கணக்குகளில் சுமார் 500 கோடி ரூபாய் வந்துள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த பணம் வங்கிக் கணக்குக்குச் சென்றுள்ளது. ஆனால் தற்போது சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வங்கிக் கணக்கில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் ஹவாலா கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை 18,000 ஸ்கூட்டர்கள் பாதிவிலைக்கு வழங்கியதாகவும் அவர் கூறுகிறார். அதே சமயம் சில நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் ஃபண்ட் வழங்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என கூறிவருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies