BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 9 January 2025

Women's Health: பூண்டுப்பால் முதல் பால் சுறா புட்டு வரை... தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்!

ரோஸ்டட் கார்லிக்

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்

தேவையானவை:

பூண்டு - 4, நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை 1:

பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

செய்முறை 2:

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

குறிப்பு: பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

பத்தியக் குழம்பு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்

தேவையானவை:

பூண்டு - 5 பல், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:

தேங்காய் - 2 சிறிய துண்டுகள், பூண்டு - 5 பல், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன்

செய்முறை:

புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

பூண்டு - கீரை - பருப்பு மசியல்

தேவையானவை:

பூண்டு - 8 பல், பாசிப்பருப்பு - அரை கப், பசலைக்கீரை - 2 கப், சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பூண்டை உரித்துக்கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய கீரை, பாசிப்பருப்பு, சீரகம், உரித்த பூண்டு சேர்த்து, கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மசியும்வரை வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது கரண்டியால் மசித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:

பொதுவாக பருப்பு சமையலை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும்போது தாய்க்கும் சேய்க்கும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம் என்பதால், அவற்றுடன் கண்டிப்பாக பூண்டு, சீரகம் அல்லது பெருங்காயம் சேர்த்துச் சமைக்க வேண்டும். பாசிப்பருப்பு வாயுத் தொல்லை கொடுக்காது என்பதால், மற்ற பருப்புகள் தவிர்த்து பாசிப்பருப்பு சேர்க்கலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கினால் இரும்புச்சத்து இழந்த தாய்மார்களுக்குக் கீரை சிறந்த உணவு.

பால்சுறா புட்டு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்

தேவையானவை:

பால் சுறா - 200 கிராம், பூண்டு - 4 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிய துண்டு, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் மீன் துண்டுகளை வைத்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும் (மீனைத் தண்ணீரில் போட்டு வேகவைத்தால் குழைந்துவிடும்). நன்றாக வெந்ததும் ஆறவிட்டு உதிர்த்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு தாளித்து, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் உதிர்த்த மீன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

பால் சுறா, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கும். ஏற்கெனவே அதிக பால்சுரப்பு உள்ள தாய்மார்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். பால் பற்றாமல் இருக்கும் தாய்மார்கள் வாரம் இருமுறை செய்து சாப்பிட ஏற்ற உணவு இது.

பூண்டுப் பால்

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்

தேவையானவை:

பூண்டு - 100 கிராம், பசும்பால் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டை உரித்துக்கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வேகவிடவும். பூண்டு வேக சற்று நேரம் எடுக்கும். எனவே, தீயை மிதமாக்கிக்கொள்ளவும். பூண்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது உப்பு சேர்க்கவும். சாப்பிட சூப் போல இருக்கும் இப்பாலைப் பருகி, பூண்டுகளைச் சாப்பிடவும்.

குறிப்பு:

நன்றாக வேகவில்லை என்றால் பூண்டு காரமாக இருக்கும் என்பதால், வேகும்வரை காத்திருக்க வேண்டும். இதைப் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அடிக்கடி பருகி வர, பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஏற்கெனவே பால் சுரப்பு சீராக உள்ள தாய்மார்களுக்கு இது தேவையில்லை.

மட்டன் மிளகு ஈரல் வறுவல்

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள்

தேவையானவை:

ஈரல் - 250 கிராம், சின்னவெங்காயம் - 5, பூண்டு - 1 பல், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கடுகு - அரை டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

செய்முறை:

ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்னவெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் ஈரலைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகு - சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும். ஈரல் வெந்ததும் தண்ணீர் இருந்தால் வற்ற வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெந்தய டீ

தேவையானவை:

வெந்தயம் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பிறகு, இறக்கி வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால் பால் நன்கு சுரக்கும். உடம்புக்கும் குளிர்ச்சியைத் தரும். கசப்பாக இருக்கும் ஆனால் பால் சுரக்க மிக சிறந்த டீ இது. டீத்தூள் இல்லாவிட்டாலும் டீ என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies